இனிப்பு என்றால் யாருக்கு தான் பிடிக்காது. குழந்தைகள் முதல் பெரியவர் வரை இனிப்பு பலகாரங்களுக்கு அடிமைதான். அதிலும் அல்வா என்றால் சொல்லவே வேண்டாம். அல்வாவிற்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. நம் வீட்டிலேயே பத்து நிமிடத்தில் கோதுமை மாவு வைத்து சுவையான தித்திப்பான அல்வா செய்யலாம் வாங்க. கோதுமை அல்வா செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ..
ஒரு அகலமான பாத்திரத்தில் இரண்டு தேக்கரண்டி கோதுமை மாவு சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் ஒரு டம்ளர் தண்ணியை கட்டிகள் விழாத வண்ண சிறிது சிறிதாக ஊற்றி நன்கு கரைத்துக் கொள்ள வேண்டும். இந்த கலவையில் இரண்டு சிட்டிகை உப்பு சேர்த்து மீண்டும் நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
ஒரு கடாயில் இரண்டு தேக்கரண்டி நெய் ஊற்றி சூடானதும் பத்து முந்திரிகளை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். கடாயில் மீதம் இருக்கும் நெய்யில் நாம் கரைத்து வைத்திருக்கும் கோதுமை மாவு கலவையை சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
மிதமான தீயில் கைவிடாமல் தொடர்ந்து ஐந்து நிமிடம் கலக்க வேண்டும். ஐந்து நிமிடம் கழித்து இரண்டு தேக்கரண்டி கோதுமை மாவு இருக்கு ஐந்து தேக்கரண்டி சக்கரை சேர்த்து மீண்டும் கலந்து கொடுக்க வேண்டும்.
சர்க்கரை நன்கு கரைந்து மாவுடன் ஒரு சேர கலந்து வரும். இந்த நேரத்தில் மற்றொரு கடாயில் மீண்டும் ஒரு ஐந்து தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு கரைத்துக் கொள்ள வேண்டும். இந்த சர்க்கரை நன்கு கரைந்து கேரமல் பதத்திற்கு வரவேண்டும். அதாவது கெட்டியாக சர்க்கரை கரைசல் மாறவேண்டும்.
பாட்டி கை பக்குவத்தில் அருமையான மாலை நேர பலகாரம்! காரசாரமான தட்டை ரெசிபி இதோ!
அப்படி கேரமல் பதத்திற்கு சர்க்கரை கரைசல் வந்தவுடன் அந்த கலவையை மீண்டும் அதே கடாயில் சேர்த்து கலந்து கொடுக்க வேண்டும். இப்பொழுது அல்வாவிற்கு அதே நிறம் கிடைத்து விடும்.
மீண்டும் விடாமல் தொடர்ந்து கிளற வேண்டும் இப்பொழுது அல்வா நன்கு திரண்டு கெட்டியாக மாறி வரும் பொழுது இரண்டு தேக்கரண்டி நெய் சேர்த்து கலந்து கொடுக்க வேண்டும். 10 முதல் 15 நிமிடம் கிளரும் பொழுது கோதுமை மாவு நன்கு வந்து சுவையான அல்வா பதத்திற்கு வந்து விடும்.
இறுதியாக நாம் நெய்யில் வறுத்த முந்திரி பருப்புகளை சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான கோதுமை அல்வா தயார்..