கிராமத்து பலகாரங்களில் முதலிடம் பிடிப்பது தட்டை. அதிலும் பாட்டி கைப்பக்குவத்தில் காரசாரமான கருவேப்பிலை வாசனையுடன் இருக்கும் தட்டைக்கு ரசிகர்கள் அதிகம் தான். எண்ணெய் பிசுபிசுப்பு இல்லாத முறுமுறு தட்டை செய்வதற்கான அருமையான ரெசிபி இதோ.
இந்த தட்டை செய்வதற்கு முதலில் ஒரு மணி நேரத்திற்கு முன்பாக ஒரு கைப்பிடி அளவு கடலைப்பருப்பை நன்கு கழுவி சுத்தம் செய்து ஊற வைக்க வேண்டும்.
ஒரு மணி நேரம் கழித்து ஒரு அகலமான பாத்திரத்தில் ஒன்றரை கப் அளவு அரிசி மாவு, ஒரு மணி நேரம் ஊற வைத்த கடலைப்பருப்பு, அரை தேக்கரண்டி சீரகம், அரை தேக்கரண்டி வெள்ளை எள், அரை தேக்கரண்டி பெருங்காயத்தூள், கைப்பிடி அளவு பொடியாக நறுக்கிய கருவேப்பிலை சேர்த்து முதலில் கலந்து கொள்ள வேண்டும்.
அடுத்ததாக அரை தேக்கரண்டி மிளகாய் தூள், கால் கை கரண்டி மஞ்சள் தூள், அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து மீண்டும் கலந்து கொள்ள வேண்டும். இந்த மாவில் உப்பு சேர்க்காத வெண்ணெய் இரண்டு தேக்கரண்டி சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
வெண்ணெய் சேர்த்து நன்கு பிசைந்ததும் தண்ணீர் கலந்து மாவை பிசைந்து கொள்ள வேண்டும். தண்ணீர் நன்கு சூடாக இருக்க வேண்டும். தண்ணீரை மொத்தமாக சேர்த்து பிசையாமல் சிறிது சிறிதாக ஊற்றி சப்பாத்தி மாவு பதம் வரும் வரைக்கும் மாவை கலந்து கொள்ள வேண்டும்.
தாபா ஸ்டைல் அசத்தலான பன்னீர் மசாலா!
நன்கு கலந்த இந்த மாவை 10 நிமிடம் வரை ஒரு ஓரமாக வைத்துவிட வேண்டும். அதன் பின் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி தன் உள்ளங்கையில் வைத்து ஒரு அழுத்தம் கொடுத்து வட்ட வடிவில் தட்டிக் கொள்ள வேண்டும்.
மாவை வட்ட வடிவில் தட்டும் பொழுது மிதமான அளவில் இருக்க வேண்டும். பருமனாகவும் இருக்கக்கூடாது மெல்லியதாகவும் இருக்கக்கூடாது. இப்பொழுது ஒரு அகலமான கடாயில் பொரித்திருப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் நம் தட்டி வைத்திருக்கும் தட்டைகளை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து பொரித்தெடுக்க வேண்டும்.