நாம் பலவிதமான துவையல் மற்றும் சட்னி ரெசிபிகளை தினம்தோறும் சாப்பிட்டு வருகிறோம்.. ஆனால் இந்த காய்கறிகளில் கூட துவையல் செய்யலாமா என பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்திருக்கிறது இந்த கத்திரிக்காய் துவையல் ரெசிபி. கத்திரிக்காயின் காரல் சுவையின் காரணமாக பலர் இதை விரும்பி சாப்பிடாவிட்டாலும் இதற்கென தனி ரசிகர் கூட்டமும் ஒரு பக்கம் இருக்கத்தான் செய்கிறது. அப்படி கத்திரிக்காயை விரும்பி சாப்பிடுபவர்களுக்கும் சாப்பிடாதவர்களுக்கும் வியப்பை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்திருக்கும் இந்த கத்தரிக்காய் துவையல் ரெசிபி. வாங்க எளிமையான முறையில் இந்த ரெசிபி செய்வதற்கான விளக்கத்தை பார்க்கலாம்.
முதலில் இருநூறு கிராம் அளவுள்ள பிஞ்சு கத்திரிக்காய் கழுவி சுத்தம் செய்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த கத்தரிக்காய்களை வட்ட வடிவில் நறுக்கி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளலாம்.
அடுத்ததாக ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் ஒன்றரை தேக்கரண்டி கடுகு, ஒன்றரை தேக்கரண்டி கடலைப்பருப்பு, ஒரு தேக்கரண்டி உளுந்து சேர்த்து இரண்டு முதல் மூன்று நிமிடம் நன்கு பொன்னிறமாக மாறும்வரை வறுத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து இதில் ஒரு கைப்பிடி அளவு வெள்ளை பூண்டு சேர்த்துக் கொள்ளலாம், வெள்ளைப் பூண்டு வதங்கும் நேரத்தில் 6 முதல் 8 காய்ந்த வத்தல் காரத்திற்கு ஏற்ப சேர்த்துக்கொள்ள வேண்டும். நன்கு எண்ணெயோடு இந்த பொருட்களை வதக்க வேண்டும்.
இதை அடுத்து நாம் நறுக்கி தண்ணீரில் போட்டு வைத்திருக்கும் கத்திரிக்காய் கடாயில் சேர்த்துக் கொள்ளலாம். மிதமான தீயில் கத்திரிக்காவை ஐந்து முதல் ஏழு நிமிடம் வரை நன்கு வதக்க வேண்டும்.
கத்திரிக்காய் வதங்கும் நேரத்தில் இரண்டு கொத்து கருவேப்பிலை வாசனைக்காக சேர்த்துக் கொள்ளலாம். ஏழு நிமிடம் கழித்து துவையலுக்கு தேவையான உப்பு, அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து மீண்டும் ஒரு முறை கிளறி கொடுத்துக் கொள்ளலாம்.
இப்பொழுது அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். இரண்டு நிமிடம் கத்திரிக்காயோடு தண்ணீர் மற்றும் மசாலா ஒரு சேர கொதித்து வரவேண்டும். இரண்டு நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விடலாம்.
இப்பொழுது நாம் வதக்கிய பொருட்கள் அனைத்தும் சிறிது நேரம் சூடு தணிந்ததும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து இதனுடன் ஊற வைத்த சிறிய நெல்லிக்காய் அளவு புளி கலந்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது சுவையான கத்திரிக்காய் துவையல் தயார். இந்த கத்திரிக்காய் துவையலுக்கு ஒரு சிறிய கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் அரை தேக்கரண்டி கடுகு, அரை தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து தாளித்து கிளறிக் கொண்டால் சுவை மனமும் அட்டகாசமாக இருக்கும்.