பஞ்சு போல புசுபுசு இட்லிக்கு இதைவிட சிறந்த சைடிஷ் இருக்கவே முடியாது… ஆறு மாதம் ஆனாலும் கெட்டுப் போகாத இட்லி பொடி ரெசிபி!

இட்லிக்கு என்ன தான் விதவிதமான சட்னி, சாம்பார் என பல சைடிஷ்கள் இருந்தாலும் இட்லி பொடிக்கு தனியிடம் எப்போதுமே இருக்கும். வீடாக இருந்தாலும் சரி நாம் ஹோட்டலில் சென்று இட்லி சாப்பிடும் நேரங்களிலும் இட்லிக்கு பல சட்னிகள் மத்தியில் சிறிய குழி கரண்டியில் பரிமாறப்படும் இட்லி பொடியின் மீது தாராளமாக எண்ணெய் சேர்த்து சாப்பிடும் பொழுது கிடைக்கும் சுவையே அலாதியாக இருக்கும். அதிலும் சில நேரங்களில் பொடி இட்லி சாப்பிடும் பொழுது தாராளமாக நெய் சேர்த்து இட்லி பொடியுடன் இட்லி வைத்து சாப்பிடும் பொழுது சுவையோ அமிர்தம். இந்த இட்லி பொடி ஒரு முறை செய்து வைத்தால் போதுமானது ஆறு மாச காலத்திற்கு கெட்டுப் போகாமல் அவசர நேரங்களில் எளிமையாக பயன்படுத்திக் கொள்ளலாம். வாங்க ஆறு மாதம் ஆனாலும் சுவை மற்றும் மனம் மாறாத இட்லி பொடி செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம்…

ஒரு அடி கனமான அகலமான கடாயை முதலில் தேர்வு செய்து கொள்ள வேண்டும். இதில் கால் கப் வெள்ளை எள் சேர்த்து நன்கு பொறிந்து வரும்வரை வறுத்துக் கொள்ள வேண்டும். வறுத்த இந்த எள் தனியாக ஒரு தட்டிற்கு மாற்றி விடலாம்.

அடுத்ததாக அதே கடாயில் கால் கப் கடலை பருப்பு சேர்த்து வறுக்க வேண்டும். கடலைப்பருப்பு வறுக்கும் பொழுது எண்ணெய் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. நன்கு பொன்னிறமாக நிறம் மாறும்வரை வறுத்து எடுத்து தனியாக தட்டில் மாற்றி வைத்துக் கொள்ளலாம்.

இதைத்தொடர்ந்து கடலை பருப்பு எடுத்த அளவிற்கு இரு மடங்கு உளுந்து கடாயில் சேர்த்து வறுக்க வேண்டும். உளுந்தும் பொன்னிறமாக மாறும் வரை வறுத்தெடுத்துக் கொள்ளலாம். அடுத்து அதே கடாயில் ஒரு தேக்கரண்டி சீரகம், ஒரு தேக்கரண்டி மிளகு, இரண்டு கொத்து கருவேப்பிலை சேர்த்து வாசனை வரும் வரை வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

மீண்டும் அதே கடாயில் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம். இதில் மூன்று துண்டு கட்டிப் பெருங்காயம் சேர்த்து வறுக்க வேண்டும். அடுத்து இட்லி பொடி நல்ல நிறம் கொடுக்க வேண்டும் என்ற காரணத்தினால் காஷ்மீர் மிளகாய்த்தூள் 15 சேர்த்து அதே எண்ணெயில் வதக்க வேண்டும்.

மட்டன் குழம்பை மிஞ்சும் சுவையில் காரசாரமான கொள்ளு குழம்பு! ரெசிபி இதோ…

இறுதியாக இட்லி பொடிக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து நாம் வறுத்த பொருட்களை சிறிது நேரம் ஆர வைக்க வேண்டும். அடுத்து நாம் வருத்த அனைத்து பொருட்களையும் ஒன்றாக மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளலாம். முதலில் காய்ந்த வத்தல் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து மீதம் இருக்கும் அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு மையாக அரைத்துக் கொள்ளலாம். இடையில் உப்பு ஒரு முறை சரிபார்த்துக் கொண்டு பொடி செய்தால் ஆறு மாதம் ஆனாலும் கெட்டுப் போகாத சுவையான இட்லி பொடி தயார்.