முட்டை தீயல் முட்டையை வைத்து செய்யக்கூடிய கேரளாவில் பிரபலமாக இருக்கும் ஒரு ரெசிபியாகும். இந்த முட்டை தீயல் வேக வைத்த முட்டையை சில மசாலாக்களை சேர்த்து செய்யும் வித்தியாசமான ஒரு ரெசிபி. இந்த ரெசிபியை அனைத்து வயதினரும் விரும்பி ருசித்து சாப்பிடுவார்கள். இந்த முட்டை தீயலை ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள் பிறகு அடிக்கடி செய்வீர்கள். வாருங்கள் கேரளா ஸ்டைல் முட்டை தீயல் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
ஒருமுறை மேகியை இப்படி முட்டை சேர்த்து செய்து பாருங்கள்.. சூப்பரான எக் மேகி…!
முட்டை தீயல் செய்வதற்கு ஐந்து முட்டைகளை எடுத்து வேகவைத்து அதன் ஓடுகளை நீக்கி நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். உங்களுக்கு விருப்பமான வடிவில் இதனை நறுக்கலாம். மஞ்சள் கரு வேண்டும் என்றால் பயன்படுத்திக் கொள்ளலாம். இல்லையெனில் வெள்ளை கருவை மட்டும் பயன்படுத்தி செய்யலாம்.
ஒரு பேனில் எண்ணெய் எதுவும் சேர்க்காமல் ஒன்னே கால் கப் அளவு துருவிய தேங்காயை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் இரண்டு சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்க்கவும். சிறிதளவு கறிவேப்பிலையும் சேர்த்து இதனை குறைவான தீயில் வைத்து நன்கு வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். தேங்காய் நிறம் மாறி பொன்னிறமாகும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
வறுத்து அரைத்த பொருட்களை ஒரு தட்டில் கொட்டி நன்கு ஆறவிட வேண்டும். ஆறிய பிறகு இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் எதுவும் விடாமல் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த தேங்காய் தான் முட்டை தீயலுக்கு நல்ல சுவை கொடுக்க கூடிய மிக முக்கியமான ஒரு பொருளாகும்.
இப்பொழுது ஒரு கடாயில் தேவையான அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். இதனுடன் 30 சின்ன வெங்காயத்தை நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். இரண்டு பச்சை மிளகாய் நறுக்கி சேர்க்கவும். இரண்டு மேசை கரண்டி அளவிற்கு நறுக்கிய தேங்காய் சில்லை சேர்க்கவும். இவை மூன்றையும் எண்ணெயில் நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். வெங்காயம் நல்ல நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.
இப்பொழுது நன்கு பழுத்த ஒரு தக்காளியை நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். தக்காளி மென்மையாகும் வரை வதக்கி விட்டு பிறகு இந்த தீயலுக்கு தேவையான மசாலாக்களை சேர்க்கலாம். கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் மல்லித்தூள், ஒன்றரை ஸ்பூன் மிளகாய் தூள், கால் ஸ்பூன் வெந்தயத்தூள் ஆகியவற்றை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கி விட வேண்டும்.
மசாலாக்கள் பச்சை வாசனை போனதும் நாம் ஏற்கனவே அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதை சேர்த்து அதையும் நன்றாக வதக்கி விட வேண்டும். பிறகு ஒன்னே கால் கப் அளவு சுடுதண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு புளியை கரைத்து சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.
வீடே மணக்கும் சுவை நிறைந்த முட்டை பிரியாணி… இப்படி செய்து பாருங்கள்…!
இப்பொழுது இதனை மூடி போட்டு சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும். குழம்பு நன்கு கொதித்ததும் நாம் நறுக்கி வைத்திருக்கும் முட்டைகளை சேர்த்து மிதமான தீயில் வைத்து ஐந்து நிமிடங்கள் வரை கொதிக்க விடவும். பிறகு தனியாக ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை மற்றும் இரண்டு காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து அதனை முட்டை தீயலுடன் சேர்த்து விடவும்.
அவ்வளவுதான் அட்டகாசமான முட்டை தீயல் தயார்.