முட்டை பிரியாணி எளிமையாக செய்யக்கூடிய அதே சமயம் சுவை நிறைந்த பிரியாணி ஆகும். இந்த பிரியாணியை மிக எளிமையாக சட்டென்று செய்து விட முடியும். மேலும் அனைவரும் இந்த பிரியாணியை விரும்பி ருசித்து சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு இதன் சுவை இருக்கும். உணவகங்களில் கிடைக்கும் பிரியாணியை போலவே அட்டகாசமான சுவையில் இந்த முட்டை பிரியாணி எப்படி செய்வது என்பதை நாம் இப்பொழுது பார்க்கலாம்.
முட்டை பிரியாணி செய்வதற்கு முதலில் ஒரு கப் அளவிற்கு பாஸ்மதி அரிசியை எடுத்து அதனை தண்ணீரில் நன்றாக அலசிக் கொள்ளவும். தண்ணீரில் அலசிய பிறகு இதனை நல்ல தண்ணீர் ஊற்றி 20 நிமிடங்கள் ஊற விட வேண்டும். ஐந்து முட்டைகளை வேகவைத்து அதன் ஓடுகளை நீக்கி தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு பேனில் இரண்டு டீஸ்பூன் அளவிற்கு எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் அதில் ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், அரை டீஸ்பூன் மஞ்சள் தூள், 1/2 டீஸ்பூன் கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து குறைவான தீயில் வைத்துக் கொள்ளவும். இப்பொழுது நாம் அவித்து வைத்திருக்கும் முட்டைகளை லேசாக கீறி அதனை எண்ணெயில் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும். இந்த முட்டையை தனியாக வைத்து விடலாம்.
ரெஸ்டாரன்ட் சுவையிலேயே அட்டகாசமான எக் ப்ரைட் ரைஸ் இப்படி செய்து பாருங்கள்…!
இப்பொழுது குக்கரில் 2 டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்துக் கொள்ளவும். பிறகு ஒரு பட்டை, ஒரு பிரியாணி இலை, இரண்டு ஏலக்காய், 2 கிராம்பு ஆகியவற்றை சேர்க்கவும். நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிய ஒரு வெங்காயத்தை சேர்த்து வெங்காயம் வதங்க தேவையான அளவு உப்பு சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கிக் கொள்ளவும். வெங்காயம் ஓரளவு நிறம் மாறியதும் அதனுடன் இரண்டு பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, சிறிதளவு புதினா மற்றும் கொத்தமல்லி சேர்த்து வதக்கி விட வேண்டும். பிறகு ஒரு தக்காளி சேர்த்து தக்காளி மென்மையாகும் வரை வதக்கவும். இதனுடன் ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள், ஒரு ஸ்பூன் கரம் மசாலா, ஒரு ஸ்பூன் மல்லித்தூள், ஒரு ஸ்பூன் பிரியாணி மசாலா, கால் ஸ்பூன் மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து கொள்ள வேண்டும்.
மசாலாக்கள் பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும். மசாலா பச்சை வாசனை போனதும் இரண்டு மேசை கரண்டி அளவிற்கு தயிர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். நன்றாக கலந்த பிறகு ஒன்றரை கப் அளவு தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் நன்றாக கொதித்ததும் இதனுடன் நாம் ஏற்கனவே ஊற வைத்திருக்கும் அரிசியை சேர்த்து கொள்ள வேண்டும். இதனுடன் அரை எலுமிச்சம் பழத்தை பிழிந்து சேர்த்துக் கொள்ளவும். பிறகு சிறிதளவு புதினா மற்றும் ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து நாம் வேகவைத்து மசாலா சேர்த்து இருக்கும் முட்டையையும் சேர்த்துக் கொள்ளவும். இப்பொழுது குக்கரை மூடி பத்து நிமிடங்கள் வேக வைத்து எடுத்தால் அட்டகாசமான முட்டை பிரியாணி தயார்…!