பிரியாணியின் அதே சுவையில்… புதினா புலாவ் ரெசிபி!

பிரியாணியின் அதை அசத்தலான சுவையில் புதினா வைத்து புலாவ் செய்யலாம் வாங்க. இந்த புலாவ் செய்வதற்கு பாஸ்மதி அரிசியை பயன்படுத்தாமல் வீட்டில் உள்ள சாப்பாட்டு அரிசியை பயன்படுத்தி மிக சுவையாக செய்துவிடலாம். அருமையான புதினா புலாவ் செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ….
இந்த புலாவ் செய்வதற்கு 15 நிமிடத்திற்கு முன்பாகவே சாப்பாட்டு அரிசி ஒரு கப் நன்கு கழுவி சுத்தம் செய்து ஊற வைத்து விட வேண்டும்.

குக்கரில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் மற்றும் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து சூடானதும் பட்டை இரண்டு, கிராம்பு இரண்டு, ஏலக்காய் 2, ஸ்டார் பூ இரண்டு, பெருஞ்சீரகம் ஒரு தேக்கரண்டி, பிரியாணி இலை இரண்டு, 10 முந்திரிப்பருப்பு சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.

இதை அடுத்து பெரிய வெங்காயம் 2 பொடியாக நறுக்கி சேர்த்து வதக்க வேண்டும், வெங்காயம் நன்கு வதங்கியதும் பொடியாக நறுக்கிய இரண்டு தக்காளி பழம் சேர்த்து வதக்க வேண்டும்.

தக்காளி வதங்கும் பொழுது அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து மிதமான தீயில் வதக்க வேண்டும். அந்த நேரத்தில் ஒரு மிக்ஸி ஜாரில் கைப்பிடி அளவு கொத்தமல்லி, கைப்பிடி அளவு புதினா, ஒரு சிறிய துண்டு இஞ்சி, 5 பல் வெள்ளை பூண்டு, காரத்திற்கு ஏற்ப மூன்று முதல் ஐந்து பச்சை மிளகாய் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் கலந்து மையாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

பாட்டி கை பக்குவத்தில் அருமையான மாலை நேர பலகாரம்! காரசாரமான தட்டை ரெசிபி இதோ!

தக்காளி நன்கு வதங்கியதும் நாம் அரைத்து வைத்திருக்கும் புதினா கலவையை அதனுடன் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். மிதமான தீயில் இரண்டு நிமிடம் புதினா கலவை எண்ணெயோடு சேர்த்து வதங்க வேண்டும். அப்பொழுதுதான் மசாலாக்களின் பச்சை வாசனை இருக்காது. இந்த நேரத்தில் அரை எலுமிச்சை பழம் பிழிந்து சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.

இறுதியாக அரை தேக்கரண்டி கரம் மசாலாத்தூள் மீண்டும் உப்பு சரிபார்த்துக் கொள்ளவும். ஒரு கப் அரிசிக்கு 2 கப் அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். தண்ணீர் நன்கு கொதித்ததும் நாம் ஊற வைத்திருக்கும் அரிசியை அதனுடன் சேர்த்து மீண்டும் ஒருமுறை கலந்து கொடுத்து குக்கரை மூடிவிடலாம்.

மூன்று விசில்கள் வைத்து இறக்கினார் சுவையான புதினா புலாவ் தயார். குக்கரின் அழுத்தம் குறைந்ததும் பரிமாறுவதற்கு முன்பாக இரண்டு தேக்கரண்டி நெய் சேர்த்து கிளறி கொடுத்து பரிமாறினால் சுவை மேலும் அருமையாக இருக்கும்.

Exit mobile version