கொளுத்தும் வெயிலுக்கு இதமாக நீர்ச்சத்து நிறைந்த சுரக்காய் வைத்து அருமையான பாயாசம் செய்வதற்கான ரெசிபி இதோ…

வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலையில் உடலுக்கு தேவையான நீர் சத்துக்களை தினசரி உணவாக எடுத்துக் கொள்வது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. தினமும் தண்ணீர் அருந்துவது மட்டுமின்றி உடலுக்கு தேவையான நீர் சக்தியை பழங்களாகவும் காய்கறிகளாகவும் நாம் உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். அந்த வகையில் நீர்ச்சத்து நிறைந்த சுரக்காய் வைத்து கூட்டு, பொரியல், பருப்பு, துவாரம் என பலவகையான ரெசிபிகள் செய்திருந்தாலும் ஒரு முறையாவது சுரக்காய் வைத்து அருமையான தித்திப்பான பாயாசம் செய்யலாம். சுரக்காய் பாயாசம் செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம்…

இந்த சுரக்காய் பாயாசம் செய்வதற்கு நன்கு விளைந்த இளம் சுரைக்காய் ஒன்றை தேர்வு செய்து கொள்ள வேண்டும். அதன் வெளி பக்கம் இருக்கும் தோள்களை நீக்கி சுத்தம் செய்து உள் பக்கம் இருக்கும் சதை பகுதிகளையும் நீக்கிக்கொள்ள வேண்டும்.

இப்பொழுது இந்த சுரக்காய் துண்டுகளை புட்டு துருவலில் வைத்து நன்கு பூ போல துருவி எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த சுரைக்காய் துருவல்களை ஒரு வெள்ளைத் துணியில் சேர்த்து நன்கு பிழிந்து அதில் இருக்கும் தண்ணீரை தனியாக எடுத்து சதைப்பகுதியை தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

அடுத்ததாக ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி நெய் சேர்த்து பத்து முந்திரி, 10 திராட்சைப்பழம் சேர்த்து நன்கு பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக மீதம் இருக்கும் அதே நெய்யில் நாம் பிழிந்து வைத்திருக்கும் சுரைக்காய் துருவல்களை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

மிதமான தீயில் ஐந்து முதல் ஏழு நிமிடம் வரை நன்கு வதக்க வேண்டும். அப்பொழுதுதான் சுரக்காயின் பச்சை வாசனை சென்று சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும். அடுத்ததாக ஒரு அகலமான பாத்திரத்தில் அரை லிட்டர் பால் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.

பால் நன்கு கொதித்து வரும் நேரத்தில் நாம் நெய்யில் வறுத்து வைத்திருக்கும் சுரைக்காய் துருவல்களை சேர்த்துக் கொள்ளலாம். சுரைக்காய் நன்கு வெந்து வரும் வரை மிதமான தீயில் வேக வைக்க வேண்டும். சுரக்காயை பாலிலே வேகவைத்து இந்த பாயாசம் செய்ய தயார் செய்வதால் இதன் சுவை சற்று கூடுதலாகவே இருக்கும்.

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ரெஸ்டாரண்டுகளில் மட்டுமே கிடைக்கும் இத்தாலியன் சாஸ் பாஸ்தா ரெசிபி!

பால் பொங்காமல் சுரக்காய் நன்கு வெந்து வரும் வரை மிதமாக கிளறி கொடுக்க வேண்டும். இந்த நிமிடம் கழித்து சுரக்காய் நன்கு வந்துள்ளதை உறுதி செய்த பிறகு அரை கப் சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம். சர்க்கரை நன்கு கரைந்ததும் அரை தேக்கரண்டி ஏலக்காய் தூள், நெய்யில் வறுத்த முந்திரி மற்றும் திராட்சை பழங்கள் சேர்த்து கிளறி இறக்கிக் கொள்ளலாம்.

இந்த பாயாசத்தை அப்படியே சூடாக சாப்பிடும் பொழுது மிகவும் அருமையாக இருக்கும். அதற்கு பதிலாக சிறிய பாத்திரங்களில் மாற்றி ஒரு அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து குளிர்ச்சியாக குடிக்கும் பொழுது மேலும் சுவையாக இருக்கும். கொளுத்தும் வெயிலுக்கு இதுபோன்ற இயற்கையான முறையில் அருமையான குளிர்பானங்களை செய்து சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு நீர்ச்சத்து கிடைப்பது மட்டுமின்றி புத்துணர்ச்சியும் கிடைக்கும்.