உடல் எடையை குறைக்க வேண்டுமா? ஐந்தே நிமிடத்தில் வறுத்து அரைத்த புதினா துவையல்! ரெசிபி இதோ…

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் எடுத்துக் கொள்ளும் உணவில் அதிகமாக கவனமாக இருக்க வேண்டும். மெட்டபாலிசம் அதிகரிக்கும் உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலமாக உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியும். மேலும் உணவு கட்டுப்பாடு மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. இந்த முறை மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் புதினா வைத்து வறுத்து அரைத்த துவையல் செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஒரு அகலமான கடாயில் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் இரண்டு தேக்கரண்டி உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும். அடுத்ததாக அரை தேக்கரண்டி சீரகம் மற்றும் அரை தேக்கரண்டி மிளகு சேர்த்து வறுத்துக் கொள்ளலாம்.

இதில் காரத்திற்கு ஏற்ப காய்ந்த வத்தல் ஐந்து முதல் ஏழு சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் 10 பல் வெள்ளை பூண்டு, ஐந்து பல் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். வெங்காயம் பாதியாக வெந்ததும் கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து முதலில் வதக்கிக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக கைபிடி அளவு சுத்தம் செய்து வைத்திருக்கும் புதினா சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். புதினா சேர்த்த ஒரு நிமிடத்தில் அடுப்பை அணைத்து விடலாம். ஏனென்றால் புதினா எளிமையான முறையில் சீக்கிரமாக வதங்கிவிடும்.

சப்பாத்திக்கு புரோட்டின் சத்து தாறுமாறாக நிறைந்த பன்னீர் வைத்து டோபு புர்ஜி!

இப்பொழுது நாம் வதக்கிய பொருட்கள் அனைத்தையும் சிறிது நேரம் ஆற வைத்து அதன் பிறகு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளலாம். இதனுடன் சிறிய நெல்லிக்காய் அளவு புளி, ஒரு தேக்கரண்டி நாட்டுச்சக்கரை, அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு மையாக அரைத்துக் கொள்ளலாம்.

இப்பொழுது அருமையான புதினா துவையல் தயார். இந்த துவையல் இட்லி மற்றும் தோசைக்கு மட்டுமல்லாமல் சூடான சாதத்திலும் அளவாக சேர்த்து சாப்பிடும் பொழுது சுவை அருமையாக இருக்கும். மேலும் உடலின் எடையை குறைத்து உடல் செரிமானத்தை அதிகரித்து சுறுசுறுப்பாக வைத்திருக்கவும் உதவும்.

Exit mobile version