பொதுவாக சப்பாத்திக்கு வெஜிடபிள் குருமா, சிக்கன் குருமா வைத்து சாப்பிடும் பொழுது சுவை அருமையாக இருக்கும். காய்கறிகள் இல்லாத சமயங்களில் எளிமையான முறையில் தக்காளி குருமா வைப்பதும் பழக்கம். சற்று சிறப்பாக சாப்பிட வேண்டும் என நினைக்கும் பொழுது பன்னீர், காளான் வைத்து கிரேவிகள் செய்யும் பொழுது அருமையாக இருக்கும். இந்த முறை பன்னீர் வைத்து எப்போதும் போல குருமா செய்யாமல் சற்று வித்தியாசமாக டோபு புர்ஜி செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க..
ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் அரை தேக்கரண்டி சீரகம் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக பொடியாக நறுக்கிய பத்து பல் பூண்டு, மூன்று பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது சேர்த்து நன்கு வதக்கி கொள்ள வேண்டும்.
அடுத்து பொடியாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். வெங்காயம் வதங்கும் நேரத்தில் கால் தேக்கரண்டி உப்பு சேர்த்து வதக்கினால் எளிமையாக இருக்கும். இப்பொழுது மசாலா பொருட்களை சேர்த்துக் கொள்ளலாம்.
வெங்காயம் பாதியாக வதங்கிய பிறகு அரை தேக்கரண்டி கரம் மசாலாத்தூள், ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள், கால் தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கி கொள்ள வேண்டும். மசாலாவின் பச்சை வாசனை செல்லும்வரை குறைந்தது இரண்டு நிமிடம் வதக்கி கொள்ளலாம்.
அடுத்ததாக பொடியாக நறுக்கிய நான்கு தக்காளி பழங்கள் சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி சேர்த்த பிறகு நன்கு கலந்து கொடுத்து மூடி போட்டு மிதமான தீயில் வேக வைக்க வேண்டும். குறைந்தது மூன்று முதல் நான்கு நிமிடம் வரை வேக வைத்தால் போதுமானது.
தக்காளி நன்கு மசிந்து தொக்கு பதத்தில் வந்ததும் மூன்று தேக்கரண்டி கடலை மாவு சேர்த்து கிளற வேண்டும். கடலை மாவு சேர்த்த பிறகு துருவி வைத்திருக்கும் பன்னீரை சேர்த்துக் கொள்ளலாம். பன்னீர் சேர்த்து மசாலாயுடன் நன்கு கலந்த பிறகு ஒரு கப் கெட்டியான பால் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பால் சேர்த்த பிறகு இறுதியாக ஒரு முறை உப்பு சரிபார்த்துக் கொள்ளலாம். இப்பொழுது மூடி போட்டு மிதமான தீயில் ஐந்து நிமிடம் கொதிக்க விட வேண்டும். ஐந்து நிமிடம் கழித்து பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் சுவையான டோபு புர்ஜி தயார்.