அரிசியை விட எட்டு மடங்கு இரும்பு சத்து நிறைந்த கம்பு வைத்து தித்திப்பான கருப்பட்டி அல்வா ரெசிபி!

பலவிதமான உணவு சாப்பிட்டாலும் உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கவில்லை என வருத்தப்படுபவர்களுக்கு இந்த ரெசிபி மிகவும் உதவியாக இருக்கும். நம் அன்றாட வாழ்க்கையில் அரிசி சாதம் அதிகமாக எடுத்துக்கொண்டு வருகிறோம்.. இந்த முறையை தவிர்த்து இதற்கு பதிலாக சிறுதானியங்களை நம் உணவில் அதிகமாக எடுத்து வரும் பொழுது நம் உடலுக்கு தேவையான நார்ச்சத்து ஊட்டச்சத்து என அனைத்து சத்துகளும் கிடைத்து நோயற்ற வாழ்க்கையை வாழ முடியும். அந்த வகையில் அரிசியைவிட எட்டு மடங்கு ஊட்டச்சத்து நிறைந்த கம்பு சிறுதானியம் வைத்து அருமையான மற்றும் தித்திப்பான கருப்பட்டி அல்வா செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க…

முதலில் ஒரு கப் கம்பு தானியத்தை எடுத்து ஒரு அகலமான பாத்திரத்தில் சேர்த்து இரண்டு அல்லது மூன்று முறை நன்கு கழுவி சுத்தம் செய்து தேவையான அளவு தண்ணீர் கலந்து ஊற வைக்க வேண்டும். இந்த தானியத்தை குறைந்தது 10 முதல் 12 மணி நேரம் நன்கு ஊர விட வேண்டும்.

அதன் பிறகு மீண்டும் ஒருமுறை கழுவி சுத்தம் செய்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளலாம். தேவையான அளவு தண்ணீர் கலந்து நன்கு வையாக அரைத்து கொள்ள வேண்டும். அனைத்து விழுதுகளில் இருந்து பாலை மட்டும் தனியாக வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த பாலை முதலில் ஒரு அகலமான கடாயில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு கப் பாலிற்கு கூடுதலாக ஒரு கப் அளவு தண்ணீர் கலந்து கொள்ள வேண்டும். மிதமான தீயில் அடுப்பில் வைத்து கிளற வேண்டும். குறைந்தது ஐந்து நிமிடம் ஆவது விடாமல் கிளற வேண்டும்.

ஐந்து முதல் பத்து நிமிடம் கிளரும் பொழுது பால் நன்கு கெட்டியாக வருவதை பார்க்கலாம். அந்த நேரத்தில் ஒரு கப் பாலிற்கு ஒரு கப் நாட்டுச்சக்கரை அல்லது பனைவெல்லம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் ஏதாவது ஒன்றை சேர்த்து நன்கு கரையும் வரை கிளறி கொடுக்க வேண்டும்.

கைவிடாமல் கிளரும் பொழுது வாசனைக்காக இரண்டு அல்லது மூன்று ஏலக்கடைகளை இடித்து சேர்த்து கொள்ளலாம். கடாயில் ஒட்டாமல் வரும்வரை மீண்டும் மீண்டும் கிளறி கொடுக்க வேண்டும். இந்த நேரத்தில் நான்கு முதல் ஐந்து தேக்கரண்டி நெய் சேர்த்து நன்கு கிளறி கொடுக்கலாம்.

நொடியில் தயாராகும் பச்சை வெங்காய சட்னி அல்லது அவசர சட்னி! ரெசிபி இதோ…

இறுதியாக கைப்பிடி அளவு முந்திரிப் பருப்பு நெய்யில் வறுத்து சேர்த்து அல்வா பதத்திற்கு கெட்டியாக உருண்டு திரண்டு வரும் நேரத்தில் அடுப்பை அணைத்து இறக்கி விட வேண்டும். மற்றொரு பாத்திரத்தில் உள்பக்கமாக சிறிதளவு நெய் தடவி நாம் தயார் செய்து வைத்திருக்கும் அல்வாவை அந்த பாத்திரத்தில் மாற்றிவிட வேண்டும்.

அரை மணி நேரம் அப்படியே வைத்துவிட்டு நமக்கு விரும்பிய வடிவில் நறுக்கி பரிமாறினால் சுவையான கம்பு கருப்பட்டி அல்வா தயார்.