பீர்க்கங்காயை தொடர்ந்து நம் உணவில் சேர்த்து வரும் பொழுது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, உடலில் கொழுப்பு தேங்குவதை குறைக்கிறது. மேலும் இந்த பீர்க்கங்காய் கல்லீரல் செயல்பாட்டிற்கு சிறந்த மருந்தாக அமைகிறது. இதனை மருத்துவ குணம் நிறைந்த பீர்க்கங்காயை வெயில் காலங்களில் அதிகமாக நம் உணவில் சேர்த்து கொள்ளும் பொழுது உடலுக்கு குளிர்ச்சி கொடுத்து பலவிதமான நோய் பாதிப்புகளிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. இப்படிப்பட்ட பீர்கங்காய் வைத்து பீர்க்கங்காய் பால்கறி செய்வதற்கான அருமையான ரெசிபி இதோ.
முதலில் கசப்பு தன்மை இல்லாத பீர்க்கங்காய்களை தேர்வு செய்து கொள்ள வேண்டும். பீர்க்கங்காய்களை நன்கு கழுவி சுத்தம் செய்து அதன் தோள்களை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக ஒரு கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் அரை தேக்கரண்டி கடுகு உளுத்தம் பருப்பு, அரை தேக்கரண்டி சீரகம், ஒரு கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
கடுகு நன்கு பொரிந்ததும் இரண்டாக கீறிய மூன்று பச்சை மிளகாய், நீளவாக்கில் நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் நன்கு கண்ணாடி பதத்தில் வதங்கியதும் அரை தேக்கரண்டி பெருங்காயத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் பீர்க்கங்காய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பீர்க்கங்காய் வதங்கும் பொழுது அரை தேக்கரண்டி உப்பு சேர்த்துக் கொள்ளலாம். இப்பொழுது பீர்க்கங்காய் முழ்கும் அளவிற்கு கடாயில் தண்ணீர் சேர்த்து ஐந்து முதல் பத்து நிமிடங்கள் வேக வைக்க வேண்டும்.
ஒரு வாரம் ஆனாலும் கெட்டுப் போகாத வெங்காய கொத்தமல்லி கார தொக்கு!
பத்து நிமிடங்களில் பீர்க்கங்காய் நன்கு வெந்துவிடும். இப்பொழுது அடுப்பை அணைத்து விடலாம். நன்கு வெந்திருக்கும் இந்த பீர்க்கங்காயே நன்கு மசித்து கொள்ளலாம். இதில் காய்ச்சிய பால் அரை கப் சேர்த்துக்கொள்ளலாம். பசும்பால் பிடிக்காதவர்களுக்கு தேங்காய் பால் அரைக்கப் சேர்த்துக் கொள்ளலாம்.
இறுதியாக கால் கப் துருவிய தேங்காய் சேர்த்து கிளறினால் சுவையான பீர்க்கங்காய் பால்கறி தயார். இந்த பீர்க்கங்காய் பால்கறி சூடான சாதத்துடன் வைத்து சாப்பிடும் பொழுது சிறப்பாக இருக்கும். மேலும் இது உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. வெயில் காலங்களில் ஏற்படும் வயிற்றுப்புண், வாய்ப்புண் போன்றவற்றிற்கு இந்த காய் அருமருந்தாக அமையும்.