சூடான சாதத்திற்கு என்ன குழம்பு வைப்பது என புலம்பும் நேரங்களில் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எளிமையான வெங்காய கொத்தமல்லி தொக்கு செய்து அனைவரையும் அசத்தலாம் வாங்க. மேலும் இந்த வெங்காய கொத்தமல்லி தொக்கு ஒரு வாரம் ஆனாலும் கெட்டுப் போகாது. இந்த தொக்கை சூடான சாதம், தோசை, சப்பாத்தி என அனைத்திற்கும் வைத்து சாப்பிடலாம். சுவையான வெங்காய கொத்தமல்லி தொக்கு செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ!
இந்த ரெசிபி செய்வதற்கு ஒரு அகலமான இரும்பு கடாயில் அரை தேக்கரண்டி வெந்தயம், அரை தேக்கரண்டி கடுகு, ஒரு தேக்கரண்டி தனியா சேர்த்து நன்கு வறுக்க வேண்டும். இதனுடன் நம் காரத்திற்கு ஏற்ப ஐந்து முதல் பத்து காய்ந்த வத்தல் சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ளவும். வறுத்த இந்த பொருட்கள் சூடு குறைந்ததும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக மாற்றிக் கொள்ளவும்.
அடுத்து அதே கடாயில் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் இரண்டு கப் கழுவி சுத்தம் செய்த கொத்தமல்லி இலை, இரண்டு பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது, பத்து பல் வெள்ளை பூண்டு, சிறிய எலுமிச்சை பழ அளவு புளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும். வதக்கிய இந்த பொருட்கள் சூடு குறைந்ததும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவு உப்பு, தண்ணீர் கலந்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
அடுத்ததாக கடாயில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் ஒரு தேக்கரண்டி கடுகு, உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும். கடுகு நன்கு பொரிந்ததும் அதில் ஒரு தேக்கரண்டி காஷ்மீரி மிளகாய் தூள் சேர்க்க வேண்டும். மிளகாய் தூள் பச்சை வாசனை சென்றவுடன் நாம் அரைத்து வைத்திருக்கும் வெங்காயம், கொத்தமல்லியை எண்ணையுடன் சேர்த்து நன்கு கலந்து கொடுக்க வேண்டும்.
வறுத்து அரைத்த கேரளா ஸ்டைல் சிக்கன் குழம்பு!
ஒரு நிமிடம் நன்கு கிளறிய பின் நாம் பொடி செய்து வைத்திருக்கும் கடுகு, வெந்தயம், தனியா பொடி இதனுடன் சேர்த்து கலந்து கொடுக்க வேண்டும். இறுதியாக ஒரு சிறிய துண்டு வெள்ளம் சேர்த்து கலந்து கொடுத்து கொதிக்க விடவும். கடாயில் ஓரங்களில் எண்ணை பிரிந்து வந்ததும் தொக்கு தயாராக மாறி உள்ளது. இப்பொழுது சுவையான வெங்காய மல்லி தயார்.
சூடான சாதத்துடன் இந்த தொக்கு கலந்து சாப்பிடும் பொழுது சுவை சிறப்பாக இருக்கும்.