சிக்கன் குழம்பு செய்யும் பொழுது எப்பொழுதும் போல கடை மசாலாக்களை வைத்து செய்யாமல் வீட்டிலேயே மசாலாவை வறுத்து அரைத்து செய்யும் பொழுது சுவை கூடுதலாக தான் இருக்கும். அப்படி கேரளா ஸ்டைலில் வறுத்து அரைத்த சிக்கன் குழம்பு செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ!
ஒரு கடாயில் இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடானதும் பட்டை ஒன்று, ஏலக்காய் 2, பெருஞ்சீரகம் ஒரு தேக்கரண்டி, கிராம்பு இரண்டு, மிளகு ஒரு தேக்கரண்டி, அரை கப் தேங்காய் துருவல், கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து நன்கு வாசனை வரும்வரை வறுத்து கொள்ளவும்.
இதனுடன் அரை தேக்கரண்டி மிளகாய் தூள், அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், அரை தேக்கரண்டி தனியாத்தூள் சேர்த்து வதக்கி ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளவும். இந்த கலவையுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
இப்பொழுது ஒரு குக்கரில் இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடானதும் ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம் சேர்த்து தாளித்துக் கொள்ளவும். அதன் பின் நறுக்கிய பெரிய வெங்காயம் இரண்டு சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் நன்கு வதங்கியதும் ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். இஞ்சி பூண்டு விழுது வாசனை சென்றவுடன் நன்கு பழுத்த இரண்டு தக்காளி பழத்தை பொடியாக நறுக்கி சேர்த்து வதக்க வேண்டும்.
தக்காளி நன்கு வதங்கி மசிந்ததும் அரை கிலோ கழுவி சுத்தம் செய்த சிக்கனை இதில் சேர்த்துக் கொள்ளலாம். தொடர்ந்து இரண்டு நிமிடம் சிக்கன் எண்ணெயுடன் நன்கு வதக்க வேண்டும் இப்பொழுது தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளலாம். இரண்டு நிமிடம் கழித்த பிறகு நாம் மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் கலவையை சிக்கனுடன் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கிராமத்து ஸ்டைல் ஆட்டுக்குடல் குழம்பு!
இப்பொழுது தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். முதல் ஐந்து நிமிடத்தில் ஒரு கொதி வந்ததும் ஒரு குக்கரில் சேர்த்து இரண்டு விசில் வரும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். இறுதியாக சுவையான கேரளா ஸ்டைல் வறுத்தரைத்த சிக்கன் குழம்பு தயார். சூடான சாதம் மற்றும் சப்பாத்தியுடன் இந்த சிக்கன் குழம்பு வைத்து சாப்பிடும் பொழுது சுவை அட்டகாசமாக இருக்கும்.