சளித்தொல்லையை விரட்டி அடித்து உடலுக்கு நன்மை தரும் கண்டதிப்பிலி ரசம்…!

சுக்கு, மிளகு, திப்பிலி இது மூன்றும் திரிகடுகம் என்று அழைக்கப்படும். இவை மூன்றும் மிகச் சிறந்த மருத்துவ குணம் நிறைந்த பொருட்களாகும். அதில் திப்பிலிகளில் ஒரு வகை தான் கண்டதிப்பிலி. சளி தொல்லை, உடல் சோர்வு ஆகியவற்றை நீக்கி உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தரக்கூடியது. மழைக்காலங்களில் குளிர்காலங்களில் சளித்தொல்லையால் அவதி படுவோர் இந்த கண்டதிப்பிலியை கொண்டு ரசம் வைத்து சாப்பிட்டால் அந்த தொல்லைகளில் இருந்து விடுபடலாம். கிராமங்களில் பிரசிவித்த பெண்களுக்கு பால் நன்கு சுரக்கவும் உடல் வலி தெரியாமல் இருப்பதற்கும் இந்த கண்டதிப்பிலி வைத்து ரசம் செய்து கொடுப்பார்கள். இப்பொழுது இந்த கண்டதிப்பிலி வைத்து எப்படி ரசம் செய்யலாம் என்பதை பார்ப்போம்.

மருத்துவ குணம் நிறைந்த முடக்கத்தான் கீரை வைத்து அருமையான முடக்கத்தான் தோசை!

இந்த ரசம் வைப்பதற்கு தேவையான மசாலா பொடியை முதலில் அரைத்துக் கொள்வோம். அதற்கு ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் அளவு எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் இரண்டு ஸ்பூன் கண்டதிப்பிலி, ஒரு ஸ்பூன் மிளகு, இரண்டு வர மிளகாய், இரண்டு ஸ்பூன் முழு மல்லி ஒரு கொத்து கறிவேப்பிலை, மூன்று பல் பூண்டு ஆகியவற்றை நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். ஓரிரு நிமிடங்கள் வதக்கிய பிறகு இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து கொள்ள வேண்டும். இதனுடன் ஒரு டீஸ்பூன் அளவிற்கு சீரகம் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது ஒரு கடாயில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு, சிறிதளவு கறிவேப்பிலை, ஒரு சிட்டிகை பெருங்காயம் ஆகியவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். இவற்றை தாளித்த பிறகு பொடியாக நறுக்கிய ஒரு தக்காளியை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.

தக்காளியை இரண்டு நிமிடங்கள் நன்கு வதக்கிய பிறகு இதனுடன் கால் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும். தேவையான அளவு உப்பு மற்றும் அரைத்த மசாலாக்களை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஒரு நெல்லிக்காய் அளவு புளியை கரைத்து இதனுடன் ஊற்ற வேண்டும்.

புளி ஊற்றிய பிறகு ஒரு ஸ்பூன் அளவு சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும். கால் கப் அளவு வேக வைத்த துவரம் பருப்பை நன்கு மசித்து இந்த ரசத்துடன் சேர்த்து கொதிக்க விடவும். இந்த ரசத்தை அதிக நேரம் கொதிக்க விடாமல் ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து இறக்கி விடலாம்.

உடல் வலிமையை அதிகரிக்கும் முருங்கைக்கீரை சூப்! ஆரோக்கியம் நிறைந்த இந்த சூப்பை செய்வது இத்தனை சுலபமா!

அவ்வளவுதான் சுவையான உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய கண்டதிப்பிலி ரசம் தயார்!

Exit mobile version