உடல் வலிமையை அதிகரிக்கும் முருங்கைக்கீரை சூப்! ஆரோக்கியம் நிறைந்த இந்த சூப்பை செய்வது இத்தனை சுலபமா!

முருங்கைக்கீரை இரும்புச்சத்து நிறைந்த ஒரு கீரையாகும். உடல் வலிமையை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை தருவதற்கும், உடலில் ரத்த சோகை இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பதற்கும் இந்த முருங்கைக்கீரை பெரிய அளவில் துணை புரிகிறது. இந்த முருங்கைக் கீரையை வைத்து குழம்பு, அடை என பலவகையான ரெசிபிகளை செய்யலாம். இந்த முருங்கைக் கீரையை வைத்து செய்யும் மற்றொரு சத்தான சுவையான ரெசிபி தான் முருங்கைக்கீரை சூப். அசைவ சூப்களுக்கு இணையான சத்துக்கள் நிறைந்தது இந்த முருங்கைக்கீரை சூப். இந்த முருங்கைக்கீரை சூப்பை அன்றாடம் நம் வாழ்வில் சேர்ப்பதன் மூலம் நோய்களிலிருந்து விடுபட்டு ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை வாழ முடியும். இந்த முருங்கைக் கீரை சூப்பை எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.

முதலில் ஒன்றரை கப் அளவிற்கு முருங்கை இலையை ஆய்ந்து சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த இலையை இரண்டு மூன்று தடவை நன்கு தண்ணீரில் அலசிக்கொள்ள வேண்டும். இலையின் காம்புகள் கடினமாக இல்லாமல் பிஞ்சாக இருப்பின் அதையும் சேர்த்து சூப் செய்யலாம்.

ஒரு கடாயில் இரண்டு ஸ்பூன் அளவு எண்ணெய் சேர்த்து அதில் அரை ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் மிளகு மற்றும் இடித்த பத்து பல் பூண்டு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். மூன்று பச்சை மிளகாய்களை இடித்து சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு பொடி பொடியாக நறுக்கிய பத்து சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும் வெங்காயம், பூண்டு ஆகியவை வதங்கியதும் நன்கு பழுத்த ஒரு பெரிய தக்காளியை பொடியாக நறுக்கி இதனுடன் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது சுத்தம் செய்து வைத்திருக்கும் இலையை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ளவும். ஒரு இரண்டு நிமிடங்கள் வதக்கிய பிறகு மூன்று கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து இதனை நன்கு கொதிக்க விட வேண்டும். முருங்கைக் கீரை நன்கு கொதித்து இலையின் சத்துக்கள் முழுவதும் சூப்பில் இறங்கும் வரை கொதிக்க விடவும். இறுதியாக கால் கப் அளவிற்கு தேங்காய் பால் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கலாம்.

இந்த முருங்கைக் கீரை சூப் தயாரான பிறகு இதன் மீது சிறிதளவு வெண்ணெய் சேர்த்து கர்ப்பிணி பெண்களுக்கு குடிக்க கொடுக்கலாம். ஐந்து வயதிற்கு உட்பட்ட சிறிய குழந்தைகளுக்கு கொடுக்கும்பொழுது இதனை வடிகட்டி கொடுக்கலாம் அவர்களுக்கு இலைகளை வென்று சாப்பிடுவதில் சிரமம் ஏற்படலாம். தேங்காய்ப்பால் சேர்க்க பிடிக்காதவர்கள் இறுதியாக வேகவைத்த பருப்பை சேர்த்தும் கொதிக்க விடலாம்.

அவ்வளவுதான் சுவையான சத்துக்கள் நிறைந்த முருங்கைக் கீரை சூப் தயாராகி விட்டது!

Exit mobile version