எளிமையாகவும் சமைக்க வேண்டும், குழந்தைகளை திருப்திப்படுத்தும் வகையிலும் சமைக்க வேண்டும் என நினைக்கும் பொழுது நாம் முதலில் தயார் செய்வது முட்டை சாதம் தான். ஐந்தே நிமிடத்தில் தயாராகும் இந்த முட்டை சாதம் வீட்டில் உள்ள அனைவர்களின் விருப்பமான உணவு வகைகளில் ஒன்றாகும். எப்போதும் ஒரே மாதிரியாக முட்டை சாதம் செய்யாமல் சற்று வித்தியாசமான முறையில் முள்ளங்கி சேர்த்து செய்யும் பொழுது அதன் சுவை அட்டகாசமாக இருக்கும். வாங்க முள்ளங்கி சேர்த்து முட்டை சாதம் செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ…
முள்ளங்கி முட்டை சாதம் செய்வதற்கு முதலில் ஒன்று அல்லது இரண்டு முள்ளங்கியை நன்கு கழுவி சுத்தம் செய்து அதன் தோள்களை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொதிக்கும் தண்ணீரில் சேர்த்து வேகவைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அடுத்ததாக ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் அரை தேக்கரண்டி கடுகு, அரை தேக்கரண்டி பெருஞ்சீரகம் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக பொடியாக நறுக்கி வைத்திருக்கும் ஒரு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கும் நேரத்தில் பழுத்த தக்காளி பழம் ஒன்று சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி மற்றும் வெங்காயம் அளவில் சிறியதாக இருந்தால் கூட போதுமானது.
வெங்காய மற்றும் தக்காளி நன்கு வதங்கியதும் நாம் வேகவைத்து வைத்திருக்கும் முள்ளங்கியை கடாயில் சேர்த்துக் கொள்ளலாம். இப்பொழுது தேவையான மசாலாக்களை கடாயில் சேர்த்துக் கொள்ளவும்.
இதற்கு கால் தேக்கரண்டி மஞ்சள் தூள், அரை தேக்கரண்டி தனி மிளகாய் தூள், அரை தேக்கரண்டி தனியா தூள், அரை தேக்கரண்டி சிக்கன் மசாலா, அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.
மசாலா தூள் சேர்த்து ஒரு நிமிடம் வரை நன்கு வதக்க வேண்டும். அப்பொழுது தான் மசாலாக்களின் பச்சை வாசனை சென்று அருமையான வாசனை கிடைக்கும். ஒரு நிமிடம் கழித்து இரண்டு முட்டையை உடைத்து சேர்த்துக் கொள்ளலாம். இப்பொழுது நன்கு முட்டையை புரட்டி பொடிமாஸ் போல் வறுவல் செய்து கொள்ள வேண்டும்.
இப்பொழுது தொக்கு தயாராக உள்ளது. இதில் நமக்கு தேவையான சாதத்தை கலந்து கொள்ள வேண்டும். பொதுவாக சாதம் வைத்து பிரட்டல் தயார் செய்யும் பொழுது சாதம் உதிரியாகவும் நன்கு சூடு தணிந்து ஆறியும் இருக்க வேண்டும். இப்பொழுது சாதம் சேர்த்து கிளறும் பொழுது தேவைப்பட்டால் மீண்டும் ஒருமுறை உப்பு சரிபார்த்துக் கொள்ளலாம்.
சாதம் சற்று அதிகமாக சேர்க்கும் பட்சத்தில் இரண்டு முட்டைக்கு பதிலாக மூன்று முட்டை சேர்த்துக் கொள்ளலாம். அல்லது முட்டை அதிகமாக சாப்பிட ஆசை இருக்கும் பட்சத்தில் நான்கு கூட சேர்த்துக் கொள்ளலாம். இப்பொழுது சுவையான முள்ளங்கி முட்டை சாதம் தயார்.
வெறும் முட்டை சாதம் சாப்பிடுவதை விட முள்ளங்கி சேர்த்து சாப்பிடும் பொழுது இந்த சாதம் சத்து நிறைந்ததாகவும் சுவை கூடுதலாகவும் இருக்கும்.