விருந்து என்றாலே அசைவ உணவு தான். நாம் ஒரு வீட்டிற்கு விருந்து சாப்பிட சென்றாலோ அல்லது நம் வீட்டிற்கு யாராவது விருந்து சாப்பிட வந்தாலோ அவர்களை திருப்திப்படுத்தும் விதத்தில் அனைத்து விதமான உணவுகளும் சிறப்பாக சுவையாக இருக்க வேண்டும். அந்த விருந்து அவர் வாழ்நாளில் மறக்க முடியாத நினைவாகவும் மாற வேண்டும். அப்படி ஒரு விருந்தாக ஒருமுறையாவது இளநீர் கொத்துக்கறி தேங்காய்ப்பால் சாதம் வீட்டில் சமைத்து பாருங்கள். இதை எளிமையாக செய்வதற்கான அசத்தல் ரெசிபி இதோ…..
முதலில் கொத்துக்கறி தயார் செய்துவிடலாம். இதற்கு ஒரு அகலமான பாத்திரத்தில் இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய், ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இதில் பிரியாணி இலை ஒன்று, பட்டை ஒன்று, கிராம்பு இரண்டு, பெருஞ்சீரகம் அரை தேக்கரண்டி சேர்த்து தாளித்துக் கொள்ளவும். அடுத்ததாக வெள்ளை பூண்டு, பச்சை மிளகாய் இரண்டு, கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.
வெள்ளைப்பூண்டு பொன்னிறமாக மாறியதும் பொடியாக நறுக்கிய இரண்டு வெங்காயம் சேர்த்துக் கொள்ளலாம். வெங்காயம் வதங்கும் நேரத்தில் கைப்பிடி அளவு புதினா இலைகளை சேர்த்து வதக்க வேண்டும்.
வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் நன்கு பழுத்த ஒரு தக்காளி பழத்தை பொடியாக நறுக்கி சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி பழம் நன்கு வதங்கியதும் மசாலா பொருட்களை சேர்த்துக் கொள்ளலாம்.
இப்பொழுது அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள், ஒரு தேக்கரண்டி கரம் மசாலாத்தூள், ஒரு தேக்கரண்டி மல்லித்தூள் சேர்த்துக் கொள்ளலாம். மசாலாக்களின் பச்சை வாசனை செல்லும்வரை வதக்கிக் கொள்ள வேண்டும். இந்த நேரத்தில் குழம்பிற்கு தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.
இந்த நேரத்தில் நாம் சிக்கனை சேர்த்துக் கொள்ள வேண்டும். சிக்கனை அப்படியே கடாயில் சேர்க்காமல் மிக்ஸியில் சேர்த்து இரண்டு முறை பொதுவாக அடித்து சிறு சிறு துண்டுகளாக மாறிய பின் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
சிக்கன் சேர்த்தவுடன் ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இப்பொழுது இந்த கலவையில் ஒரு தேக்கரண்டி மிளகுத்தூள், ஒரு கப் இளநீர், இளநீரின் உள்பகுதி இருக்கும் வழுக்கையை சேர்த்துக் கொள்ளலாம்.
இதை நன்கு கலந்து கொடுத்து குறைந்தது பத்து நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். இறுதியாக கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் சுவையான சிக்கன் கொத்துக்கறி தயார்.
அடுத்ததாக தேங்காய் பால் சாதம் தயார் செய்யலாம்.
தேங்காய் பால் சாதம் செய்வதற்கு பாஸ்மதி அரிசியை குறைந்தது 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். ஒரு குக்கரில் இரண்டு தேக்கரண்டி நெய் சேர்த்து சூடானதும் ஒரு பிரியாணி இலை, , கிராம்பு மூன்று, பட்டை 2, ஏலக்காய் இரண்டு, பெருஞ்சீரகம் அரை தேக்கரண்டி, அண்ணாச்சி பூ ஒன்று, கல்பாசி சிறிதளவு சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
அடுத்ததாக ஐந்து முதல் பத்து முந்திரிப்பருப்பு, நீளவாக்கின் லேசாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம், கைப்பிடி அளவு புதினா இலை சேர்த்து வதக்க வேண்டும்.
வெங்காயம் வதங்கும் நேரத்தில் பொடியாக நறுக்கிய ஐந்து பல் வெள்ளை பூண்டு, இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். இப்பொழுது ஒரு கப் பாஸ்மதி அரிசிக்கு ஒன்றரை கப் தேங்காய் பால் சேர்த்துக் கொள்ளலாம்.
அதன்படி ஒன்றரை கப் தேங்காய் பால் தேவையான அளவு உப்பு கலந்து கொள்ளவும் . இறுதியாக நம் ஊற வைத்திருக்கும் அரிசியை கழுவி சுத்தம் செய்து குக்கரில் சேர்த்து கொள்ளலாம்.
மூன்று விசில்கள் வரும் வரை வேக வைத்து இறக்கினார் சுமையான தேங்காய் பால் சாதம் தயார். இந்த தேங்காய் பால் சாதத்திற்கு இளநீர் கொத்துக்கறி வைத்து சாப்பிடும் பொழுது விருந்து சாப்பிட்ட திருப்தி கிடைக்கும்.