சைவ பிரியர்கள் மட்டுமில்லாமல் அசைவ பிரியர்களுக்கும் காரக்குழம்பு என்றாலே தனி விருப்பம் தான். காரக்குழம்பு வைத்த அன்றைய நாளை விட மறுநாள் சாப்பிடும் பொழுது சுவை அவ்வளவு அருமையாக காரமும் புளிப்பும் ஒன்று சேர்ந்து சிறப்பாக இருக்கும். இப்படி ஒரு நாள் கார குழம்பு வைத்து பல நாட்கள் நாம் கடத்தி விடலாம். அனைவருக்கும் பிடித்த இந்த காரக்குழம்பை ஒரே மாதிரியாக இல்லாமல் கற்று வித்தியாசமான முறையில் சாப்பிட ஆசை.. . வாங்க கனி அக்கா ஸ்பெஷல் கொய்யாப்பழ கார குழம்பு செய்யலாம்… அதற்கான ரெசிபி விளக்கம் இதோ…
இந்த குழம்பு செய்வதற்கு முதலில் மசாலாவை தயார் செய்து கொள்ளலாம். இதற்கு ஒரு அகலமான கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் ஒரு தேக்கரண்டி மல்லி, ஒரு தேக்கரண்டி கடலைப்பருப்பு, ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்த்து வறுத்துக்கொள்ள வேண்டும். அடுத்ததாக காரத்திற்கு ஏற்ப மூன்று முதல் ஐந்து கார வத்தல் சேர்த்துக் கொள்ளலாம்.
மேலும் இதனுடன் ஆறாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், நான்காக நறுக்கிய ஒரு தக்காளி பழம், கால் கப் தேங்காய் சேர்த்து வதக்க வேண்டும். வதக்கிய இந்த பொருட்களின் சூடு தணிந்ததும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் கலந்து நன்கு மையாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இப்பொழுது மசாலா தயாராக உள்ளது.
அடுத்ததாக ஒரு கொய்யாப்பழத்தை நீளவாக்கில் சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கி வைத்திருக்கும் கொய்யாப்பழ துண்டுகளை சேர்த்து வதக்க வேண்டும். குறைந்தது 4 நிமிடம் ஆவது மிதமான தீயில் கொய்யாப்பழத்தை வதக்கிக் கொள்ளலாம்.
அதன் பின் ஒரு கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் அரை தேக்கரண்டி கடுகு, அரை தேக்கரண்டி வெந்தயம், அரைத்து தேக்கரண்டி கடலை பருப்பு, ஒரு காய்ந்த வத்தல், கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
அடுத்ததாக வெள்ளை பூண்டு 10, பொடியாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம் சேர்த்து வளர்க்க வேண்டும். வெங்காயம் வதங்கும் நேரத்தில் அரை தேக்கரண்டி பெருங்காயத்தூள் சேர்த்துக் கொள்ளலாம். வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் இரண்டு தக்காளி பழத்தை விழுதுகளாக அரைத்து சேர்த்துக் கொள்ள வேண்டும்.
தக்காளி நன்கு வதங்கியதும் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், உப்பு சேர்த்துக் கொள்ளலாம். இதனுடன் நாம் அரைத்து வைத்திருக்கும் விழுதுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இதனுடன் எலுமிச்சை பல அளவு ஊறவைத்த புளி கரைசல், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இந்த குழம்பை 15 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.
தோசை பிரியரா நீங்க…. வாங்க! கர்நாடகா ஸ்பெஷல் முல்பாகல் தோசை ரெசிபி இதோ!
15 நிமிடம் கழித்து நாம் பொறித்து வைத்திருக்கும் கொய்யாப்பழம், அரைத்து தேக்கரண்டி வெல்லம் சேர்த்து கலந்து கொள்ளலாம். மிதமான தீயில் இந்த குழம்பை ஒரு நிமிடம் கொதிக்க வைத்தால் போதுமானது. இப்பொழுது சுவையான கொய்யாப்பழம் காரக்குழம்பு தயார். சூடான சாதம் இந்த கொய்யாப்பழ காரக்குழம்பு,அப்பளம் அல்லது முட்டை வைத்து ஆம்லெட் செய்து இதனுடன் சாப்பிடும் பொழுது அவ்வளவு அருமையாக இருக்கும்.