மழைக்காலங்களில் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை கண்டிப்பாக வைக்க வேண்டிய தூதுவளை ரசம்!

மழைக்காலங்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் அடிக்கடி சளி, காய்ச்சல், இருமல், உடல் அசதி, சோர்வு ஏற்படுவது வழக்கம். இந்த நேரங்களில் எளிமையாக செரிமானமாகும் வகையிலும், உடலுக்கு புத்துணர்ச்சி தரும் வகையில் நாம் உணவு முறைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில் தூதுவளை ரசம் உடலுக்கு நல்ல புத்துணர்ச்சி அளித்து உடலை வலுப்பெற வைக்கிறது. இந்த ரசம் செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ…

ஒரு அகலமான கடாயில் அரை தேக்கரண்டி மிளகு, அரை தேக்கரண்டி சீரகம், ஒரு தேக்கரண்டி தனியா சேர்த்து நன்கு வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும். வறுத்த இந்த பொருட்களை ஒரு மிக்ஸி ஜாருக்கு மாற்றிக் கொள்ளலாம்.

அடுத்ததாக அதில் 15 முதல் 20 தூதுவளை இலைகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். தூதுவளை இலைகளை செடியிலிருந்து நீக்கி அதன் முள்பகுதிகளை சுத்தம் செய்து மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளலாம். இதனை நன்கு பொடி செய்து கொள்ள வேண்டும்.

அதன் பின் ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் அரை தேக்கரண்டி கடுகு, அரை தேக்கரண்டி சீரகம், மூன்று காய்ந்த வத்தல் சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
இதனுடன் பொடியாக நறுக்கிய இரண்டு தக்காளி பழம், கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி பழம் பாதியாக வதங்கியதும் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், அரை தேக்கரண்டி பெருங்காயத்தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து இதனுடன் 5 பல் வெள்ளைப் பூண்டுவை தட்டி சேர்த்து வதக்க வேண்டும். வெள்ளைப்பூண்டு நன்கு வதங்கியதும் நாம் மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் கலவையை கடாயில் சேர்த்துக் கொள்ளலாம்.
அரைத்த விழுதுகளை கடாயில் சேர்த்து இரண்டு நிமிடம் வரை வதக்க வேண்டும். இப்பொழுது எலுமிச்சை பல அளவு ஊறவைத்த புளி கரைசல் எடுத்துக் கொள்ளலாம். கூடுதலாக தண்ணீர் தேவைப்பட்டால் சேர்த்து கலந்து கொள்ளலாம்.

கேசரியை விட தித்திப்பான சுவையில் ஐந்தே நிமிடத்தில் நாவில் வைத்ததும் கரையும் தரமான ஸ்வீட் ரெசிபி!

இறுதியாக ஒரு முறை உப்பு சரிபார்த்து மிதமான தீயில் ரசத்தை சூடு படுத்த வேண்டும். ரசம் நன்கு சூடாகி ஒரு முறை கொதி வந்தால் போதுமானது. இப்பொழுது சுவையான தூதுவளை ரசம் தயார்.
இந்த ரசத்தை சூடான சாதத்துடன் வைத்து சாப்பிடும் பொழுது அமிர்தமாக இருக்கும். மேலும் இந்த ரசத்தை சூப் போல குடிக்கவும் செய்யலாம்.