ரெஸ்டாரன்ட் சுவையிலேயே அட்டகாசமான எக் ப்ரைட் ரைஸ் இப்படி செய்து பாருங்கள்…!

ரெஸ்டாரென்களில் கிடைக்கும் எக் ஃபிரைடு ரைஸ் தனித்துவமான சுவையுடன் இருக்கும். அதே போன்ற எக் ஃபிரைட் ரைஸை நாம் வீட்டில் செய்யும்போது அதே சுவை கிடைக்குமா என்பது சந்தேகம்தான். ஆனால் இனி கவலை வேண்டாம். ரெஸ்டாரண்ட் சுவையிலேயே நாமும் வீட்டிலேயே எக் ப்ரைட் ரைஸ் செய்ய முடியும். இதை மதிய உணவிற்கு லஞ்ச் பாக்ஸ் ரெசிபி ஆகவும் முயற்சிக்கலாம். நிறைய முட்டைகள் காய்கறிகள் சேர்த்து செய்யும் இந்த எக் ஃபிரைடு ரைஸ் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். வாருங்கள் இந்த எக் ஃபிரைடு ரைஸ் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

உணவகங்களில் கிடைக்கும் பிரைடு ரைஸை மிஞ்சும் சுவையில் இனி வீட்டிலேயே பிரைட் ரைஸ் செய்யலாம்…!

எக் ப்ரைட் ரைஸ் செய்வதற்கு முதலில் அரை கப் அளவிற்கு பாஸ்மதி அரிசியை நன்கு கழுவி 30 நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். 30 நிமிடங்கள் நன்கு ஊறிய பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைத்து அதில் சில துளி எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். எண்ணெய் சேர்க்கும் பொழுது சாதம் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் கிடைக்கும். இப்பொழுது ஊற வைத்திருக்கும் அரிசியை சேர்த்து வேகவைத்து வடித்து எடுத்துக் கொள்ள வேண்டும். அரிசி அதிகம் குழைந்து விடக்கூடாது. பிறகு வேக வைத்த சாதத்தை ஒரு தட்டில் கொட்டி ஆற வைத்துக் கொள்ளவும்.

பிறகு ஒரு கடாயில் இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் காய்ந்ததும் ஐந்து முட்டைகளை உடைத்து ஊற்றிக் கொள்ள வேண்டும். முட்டை உடன் சிறிதளவு உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். முட்டை வெந்ததும் இதனை தனியாக வைத்து விடலாம். பிறகு அதே கடாயில் இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து பொடியாக நறுக்கிய இஞ்சி ஒரு டேபிள் ஸ்பூன், பொடியாக நறுக்கிய பூண்டு ஒரு டேபிள்ஸ்பூன் சேர்த்து எண்ணெயில் வதக்கிக் கொள்ளவும்.

இப்பொழுது பொடியாக நறுக்கிய ஒரு கேரட், கால் பங்கு முட்டைகோஸ், 10 பின்ஸ் ஆகியவற்றை சேர்க்கவும். இந்த காய்கறிகளை எண்ணெயில் நன்கு வதக்கவும். காய்கறிகள் முழுவதும் வேக வேண்டிய அவசியம் இல்லை. ஒரு 80% வெந்ததும் இதில் சாஸ்களை சேர்க்கத் தொடங்கலாம். ஒரு ஸ்பூன் அளவிற்கு சில்லி சாஸ், ஒரு ஸ்பூன் சோயா சாஸ் ஆகியவற்றை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இப்பொழுது நாம் வேகவைத்து வைத்திருக்கும் அரிசியை சேர்த்து அரிசி உடையாமல் இதனை கிளறவும். பிறகு பொரித்து வைத்திருக்கும் முட்டையையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இறுதியாக இதில் மிளகுத்தூள் தூவி சிறிதளவு பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் சேர்த்து கிளறி இறக்கி விடலாம்.

அவ்வளவுதான் சுவையான எக் பிரைட் ரைஸ் ரெஸ்டாரண்ட் சுவையில் தயாராகி விட்டது.