ரெஸ்டாரன்ட் ஸ்டைல் காரசாரமான வெள்ளை குருமா!

பொதுவாக நம் வீடுகளில் பூரி, சப்பாத்திக்கு காரசாரமான குருமா வைப்பது வழக்கம். அதில் சிவப்பு நிறத்திற்காக காஷ்மீரி மிளகாய் தூள், தனி மிளகாய் தூள் என சேர்த்து காரசாரத்துடன் சிவக்க சிவக்க இருக்கும். ஆனால் சிலருக்கு அதைவிட வெள்ளை குருமா மிகவும் பிடிக்கும். பார்ப்பதற்கு எளிமையாக சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும் இந்த வெள்ளை குருமா செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ..

இந்த வெள்ளை குருமா செய்வதற்கு முதலில் மசாலாவை அரைத்தெடுத்துக் கொள்ளலாம். அதற்கு ஒரு கப் துருவிய தேங்காய், இரண்டு ஏலக்காய், இரண்டு சிறிய துண்டு பட்டை, ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம், 2 தேக்கரண்டி பொரிகடலை, முந்திரிப் பருப்பு ஐந்து, கிராம்பு மூன்று, அரை தேக்கரண்டி கசகசா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

மிக்சியில் அரைக்கும் பொழுது தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளலாம். வெள்ளை குருமாவிற்கு கூடுதல் சுவையை தருவது அதில் சேர்க்கப்படும் மசாலா வகைகள் தான். ஒரு கடாயில் இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் பிரியாணி இலை, ஸ்டார் பூ, இரண்டு துண்டு பட்டை, சிறிய துண்டு கல் பாசி சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.

அடுத்ததாக பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். குறிப்பாக வெங்காயம் பொன்னிறமாக வதங்க வேண்டிய அவசியம் இல்லை, கண்ணாடி பதத்தில் வதங்கினால் போதுமானது. வெங்காயம் வதங்கியதும் காரத்திற்கு ஏற்ப இரண்டு அல்லது மூன்று பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.

பச்சை மிளகாய் பாதி வதங்கியதும் குருமாவிற்கு தேவையான காரட், பீன்ஸ், பச்சை பட்டாணி, உருளைக்கிழங்கு இவற்றை நன்கு கழுவி சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கடாயில் சேர்த்து வதக்க வேண்டும். காய்கறிகளை தொடர்ந்து இரண்டு நிமிடங்கள் அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.

காய்கறிகள் பாதி வதங்கியதும் ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும். இஞ்சி, பூண்டு விழுதின் பச்சை வாசனை சென்றவுடன் ஒன்றரை டம்ளார் தண்ணீர் சேர்த்து காய்கறிகளை நன்கு வேக வைத்து கொள்ளவும்.

கறி குழம்பு சுவையை மிஞ்சும் அளவிற்கு சுவையான முள்ளங்கி குழம்பு!

மிதமான தீயில் 5 முதல் 7 நிமிடங்கள் வரை காய்கறிகளை வேக வைக்க வேண்டும். அதன் பின் நம் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதுகளை சேர்த்து மேலும் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்.

ஐந்து நிமிடம் கழித்து இறக்கினால் சுவையான வெள்ளை குருமா தயார். இந்த குருமாவை பரிமாறுவதற்கு முன்பாக பொடியாக நறுக்கிய மல்லி இலைகள் தூவி பரிமாறினால் சுவை அருமையாக இருக்கும்.