வீட்டில் காய்கறிகள் இல்லாத நேரங்களில் இட்லி, தோசையில் தொடங்கி சாதம்,பூரி, சப்பாத்தி எனஅனைத்திற்கும் ஏற்ற வெள்ளை சால்னா செய்வதற்கான ரெசிபி!

வீட்டில் பெரிதாக காய்கறிகள் இல்லாத சமயங்களில் இட்லி மற்றும் தோசை, பூரி,சப்பாத்தி, இடியாப்பம் போன்ற டிபன் இருக்கும் மதிய வேலை சாதத்திற்கும் விதவிதமாக குழம்பு செய்ய வேண்டும் என குழப்பத்தில் இருப்பவர்களுக்கு இந்த ரெசிபி மிக உதவியாக இருக்கும். காய்கறிகள் இல்லாமல் குழம்பு சமைக்க வேண்டும் அந்த குழம்பு ரெசிபி அனைவருக்கும் பிடித்தமானதாகவும் திருப்தி படுத்த வேண்டும் என நினைப்பவர்களுக்கு இந்த வெள்ளை சால்னா ரெசிபி மிகவும் பொருத்தமான ஒன்று. வாங்க எளிமையான முறையில் வெள்ளை சால்னா ரெசிபி செய்வதற்கான விளக்கத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்…

முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் மூன்று பச்சை மிளகாய், ஐந்து சின்ன வெங்காயம், 2 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, ஒரு தேக்கரண்டி பொரிகடலை, ஒரு தேக்கரண்டி கசகசா, 6 முதல் 8 முந்திரி, ஒரு தேக்கரண்டி மிளகு, ஒரு தேக்கரண்டி சீரகம், அரை கப் தேங்காய் துருவல் சேர்த்து அரைக்க வேண்டும்.

இதனுடன் ஒரு சிறிய துண்டு பட்டை, ஒரு சிறிய துண்டு கிராம்பு, ஏலக்காய் 2, கல்பாசி சிறிதளவு சேர்த்து அரைத்துக் கொள்ளலாம். இந்த தேங்காய் விழுது அரைக்கும் பொழுது தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து நன்கு மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது ஒரு குக்கரில் 2 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் அரை தேக்கரண்டி பெருஞ்சீரகம், ஒரு பிரியாணி இலை, , கிராம்பு ஒன்று, ஏலக்காய் 1 சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ளலாம்.

வெங்காயம் வதங்கும் நேரத்தில் கைப்பிடி அளவு கருவேப்பிலை, அரை தேக்கரண்டி உப்பு சேர்த்துக் கொள்ளலாம். வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் நாம் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதுகளை குக்கரில் சேர்த்துக் கொள்ளலாம். இப்பொழுது மேலும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

இரண்டு நாள் ஆனாலும் சுவை மாறாமல் அப்படியே இருக்கும் வெண்டைக்காய் பொரித்த குழம்பு! ரெசிபி இதோ..

இறுதியாக ஒரு முறை உப்பு சரிபார்த்து குக்கரை மூடி விட வேண்டும். இரண்டு விசில்கள் கொதிக்க வைத்து இறக்கினால் சுவையான வெள்ளை சால்னா தயார். இந்த சால்னாவை பரிமாறுவதற்கு முன்பாக கைப்பிடி அளவு கொத்தமல்லி மற்றும் புதினா இலைகளை தூவி பரிமாறினால் சுவை அருமையாக இருக்கும்.

இந்த வெள்ளை சால்னா சூடான சாதம் முதல் இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, பரோட்டா, இடியாப்பம் என அனைத்திற்கும் சிறந்த பொருத்தமாக இருக்கும். காய்கறிகள் இல்லாத சமயங்களில் இது போன்ற குருமா செய்து அசத்துங்கள்.