பொதுவாக பிரியாணி என்றாலே காரசாரமாக மஞ்சள் கலந்த சிவப்பு வண்ணத்தில் தான் இருக்கும் என்பது பலரின் கருத்தாக இருக்கும். ஆனால் கொங்கு நாட்டில் செய்யப்படும் வறுத்து அரைத்த மசாலா வைத்து தயாரிக்கப்படும் வெள்ளை பிரியாணி மிகவும் பிரபலம் அடைந்தது. குறைவான மசாலாக்களை பயன்படுத்தி பளிச்சிடும் வண்ணங்கள் இல்லாமல் எளிமையான முறையில் அதிக சுவையுடன் உருவாகும் இந்த பிரியாணி பலரின் விருப்பமான பிரியாணியாக மாறிவிடும். இந்த கொங்கு நாட்டு வெள்ளை பிரியாணி செய்வதற்கான எளிமையான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கொங்கு நாட்டு வெள்ளை பிரியாணி செய்வதற்கு முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் எட்டாக நறுக்கிய 2 பெரிய வெங்காயம் அல்லது 20 சின்ன வெங்காயம், காரத்திற்கு ஏற்ப மூன்று முதல் ஐந்து பச்சை மிளகாய், ஒரு சிறிய துண்டு இஞ்சி, 5 பல் வெள்ளை பூண்டு, , ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம், இரண்டு துண்டு பட்டை, இரண்டு ஏலக்காய், 2 கிராம்பு, அண்ணாச்சி பூ ஒன்று, சிறிதளவு கல் பாசி சேர்த்து நன்கு மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக ஒரு குக்கரின் மூன்று தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். தேங்காய் எண்ணெய் சூடானதும் இரண்டு பிரியாணி இலை, , சிறிதளவு கல்பாசி சேர்த்து தவித்துக் கொள்ளலாம். அடுத்ததாக நீளவாக்கில் நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
வெங்காயம் வதங்கும் நேரத்தில் சிறிதளவு கல் உப்பு சேர்த்துக் கொள்ளலாம். வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் நாம் அரைத்து வைத்திருக்கும் பச்சை மசாலாவை குக்கரில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
மசாலாவின் பச்சை வாசனை செல்லும் வரை மிதமான தீயில் ஐந்து நிமிடம் வதக்க வேண்டும். இப்பொழுது நாம் கழுவி சுத்தம் செய்து வைத்திருக்கும் சிக்கனை சேர்த்துக் கொள்ளலாம். சிக்கனுடன் இணைந்து மசாலாக்கள் ஒரு சேர வரும் வரை மீண்டும் ஒரு ஐந்து நிமிடம் வதக்க வேண்டும்.
இந்த நேரத்தில் நாம் அரை மணி நேரம் ஊற வைத்திருக்கும் பாஸ்மதி அரிசி அல்லது சீரக சம்பா அரிசியை சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு கப் அரிசிக்கு இரண்டு கப் வீதம் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். இறுதியாக மீண்டும் ஒருமுறை உப்பு சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
ஒன்று சாப்பிட்டால் 10 சாப்பிட தோன்றும் விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் இனிப்பு பூரண கொழுக்கட்டை ரெசிபி!
கொத்தமல்லி இலை சேர்த்து கிளறி மிதமான தீயில் மூடி போட்டு வேக வைக்க வேண்டும். மூன்று விசில்கள் வரும்வரை வேகவைத்து இறக்கினால் சுவையான கொங்கு நாட்டு வெள்ளை பிரியாணி தயார். குக்கரில் அழுத்தம் குறைந்ததும் பிரியாணியை திறந்து பார்த்து மேலே இரண்டு தேக்கரண்டி நெய் சேர்த்து கிளறி பரிமாறினால் மேலும் அமிர்தமாக இருக்கும்.
இந்த பிரியாணியில் அதிகப்படியாக வண்ணத்திற்காக எந்த மசாலாக்களும் சேர்க்கப்படாமல் மிதமான முறையில் காரசாரமான நல்ல சுவையில் அமைந்திருக்கும். இதற்கு சைட் டிஷ் ஆக கோழி மிளகு பிரட்டல் வைத்து சாப்பிடும் பொழுது திருப்தியாக இருக்கும்.