அரைக்காமல், ஊற வைக்காமல் பத்து நிமிடத்தில் பஞ்சு மாதிரி மிருதுவான இட்லி தயார்! ரெசிபி இதோ…

அரிசி மாவு இட்லி செய்வதற்கு பல மணி நேரங்களுக்கு முன்பாகவே அரிசி மற்றும் பருப்பு ஊற வைக்க வேண்டும். அதன் பின் அதை பக்குவமாக அரைத்து எட்டு மணி நேரம் குளிக்க வைக்க வேண்டும். இப்படி செய்தால் மட்டுமே சுவையான பஞ்சு மாதிரி இட்லி தயார் செய்ய முடியும். ஆனால் அதற்கு நேரம் இல்லாத பொழுது வீட்டில் இருக்கும் கோதுமை ரவை வைத்து அருமையான இட்லி செய்யலாம் வாங்க. இந்த இட்லி செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ..

இந்த இட்லி செய்வதற்கு ஒரு கப் கோதுமை ரவையை ஒரு அகலமான கடாயில் சேர்த்து நன்கு வறுக்க வேண்டும். குறைந்தது இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் வரை வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளலாம். கோதுமை ரவை பொன்னிறமாக மாறியதும் அடுப்பை அணைத்து விடவேண்டும்.

வறுத்த இந்த ரவையை ஒரு அகலமான தட்டிற்கு மாற்றிக் கொள்ளலாம். மீண்டும் அதே கடாயில் ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடானதும் அரை தேக்கரண்டி கடுகு, அரை தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, அரை தேக்கரண்டி கடலைப்பருப்பு, அரை தேக்கரண்டி சீரகம், கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

இதனுடன் காரத்திற்கு ஏற்ப இரண்டு அல்லது மூன்று பச்சை மிளகாயை சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். பச்சை மிளகாய் நன்கு வதங்கியதும் பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.

வெங்காயம் வதங்கும் நேரத்தில் அரை தேக்கரண்டி உப்பு, அரை தேக்கரண்டி பெருங்காயத்தூள் சேர்த்துக் கொள்ளலாம். வெங்காயம் பொன்னிறமாக வதங்க வேண்டிய அவசியம் இல்லை கண்ணாடி பதத்தில் வதங்கினால் போதுமானது.

இப்பொழுது வதக்கிய இந்த பொருட்களை வறுத்து வைத்திருக்கும் ரவையுடன் சேர்த்துக் கொள்ளலாம். இந்த கலவையுடன் ஒரு கப் கெட்டியான தயிர், கைப்பிடி அளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி கலந்து கொள்ள வேண்டும். இதில் மீண்டும் ஒரு அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து கலந்து கொள்ளலாம்.

சமைக்கும் உணவை அமிர்தமாகவும் சுவையாகவும் சிறப்பாகவும் மாற்ற சில சமையல் கலை டிப்ஸ்!
இப்பொழுது தயிர் போக மாவு இட்லி மாவு பதத்திற்கு வரும் வரை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளலாம். ரவை நன்கு ஊறி வருவதற்காக 15 முதல் 20 நிமிடம் அப்படியே ஓரமாக வைத்து விடலாம்.

குறைந்தது 20 நிமிடம் கழித்து ரவை நன்கு ஊறி இருக்கும். இதில் அரை தேக்கரண்டி பேக்கிங் சோடா, மீண்டும் தேவையான அளவு தண்ணீர் கலந்து மாவு தயார் செய்து கொள்ளலாம். மாவில் அதிகமாக தண்ணீர் சேர்க்கக்கூடாது இட்லி பதமாக வராது..இட்லி மாவு பதத்திற்கு ஏற்றார் போல் தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது மாவு தயார் இந்த மாவை எப்பொழுதும் போல இட்லி தட்டில் ஊற்றி இட்லியை வேக வைக்க வேண்டும். குறைந்தது இந்த இட்லியை 10 முதல் 15 நிமிடம் நல்ல ஆவியில் வேக வைக்க வேண்டும்.
இப்பொழுது சுவையான கோதுமை ரவை இட்லி தயார். இந்த இட்லிக்கு தேங்காய் சட்னி தக்காளி சட்னி, சாம்பார் என எது வைத்து சாப்பிட்டாலும் சுவை அருமையாக இருக்கும்.

Exit mobile version