வீட்டு சமையல்களில் பக்குவமாக பார்த்து பார்த்து சமைக்கப்படும் குழம்பு வகைகளில் ஒன்று வெந்தய குழம்பு. இந்த குழம்பு சூடான சாதத்திற்கு மட்டுமில்லாமல் இட்லி தோசைக்கு வைத்து சாப்பிடும் பொழுதும் சற்று புளிப்பாகவும் காரம் தூக்கலாகவும் அருமையாக இருக்கும். மேலும் இந்த குழம்பு பழைய சாதத்துடன் வைத்து சாப்பிடும் பொழுது மீண்டும் மீண்டும் தூண்டும் விதத்தில் சுவை அட்டகாசமாக இருக்கும். இப்படிப்பட்ட வெந்தய குழம்பு பத்தே நிமிடத்தில் செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ…
ஒரு அகலமான கடாயில் ஒரு தேக்கரண்டி வெந்தயம், அரை தேக்கரண்டி சீரகம் சேர்த்து நன்கு வாசனை வரும் வரை வறுத்தெடுத்துக் கொள்ளவும். வறுத்த இந்த பொருட்களை ஒரு அகலமான தட்டிற்கு மாற்றி வைத்துக் கொள்ளலாம்.
மீண்டும் அதே கடாயில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் ஒரு தேக்கரண்டி கடுகு, அரை தேக்கரண்டி வெந்தயம், 10 பல் வெள்ளை பூண்டு, , கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும். அடுத்ததாக தோல் உரித்த சின்ன வெங்காயம் 10 முதல் 15 சேர்த்துக் கொள்ளலாம்.
சின்ன வெங்காயத்தை அப்படியே சேர்த்துக் கொள்ளலாம் நறுக்க வேண்டிய அவசியம் இல்லை. வெங்காயம் நன்கு பொன்னிறமாக வரும் வரை வதக்கிக் கொள்ளவும். இதனுடன் நன்கு பழுத்த இரண்டு தக்காளி பழத்தை பொடியாக நறுக்கி சேர்த்து வதக்க வேண்டும்.
தக்காளி பழம் வதக்கும் நேரத்தில் அரை தேக்கரண்டி உப்பு சேர்த்துக் கொள்ளலாம். மிதமான தீயில் தக்காளியை நன்கு வதக்கும் பொழுது கடாயின் ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் நேரத்தில் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள் சேர்த்து பச்சை வாசனை செல்லும் வரை வதக்க வேண்டும்.
அடுத்ததாக எலுமிச்சை பழ அளவு ஊற வைத்துள்ள புளி கரைசல் சேர்த்துக் கொள்ளலாம். இப்பொழுது மீண்டும் ஒருமுறை உப்பு சரிபார்த்து குழம்பிற்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும். இந்த நேரத்தில் நாம் முதலில் வறுத்து வைத்திருக்கும் வெந்தயம் மற்றும் சீரகத்தை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு மையாக பொடி செய்து கொள்ள வேண்டும்.
மூன்று வெங்காயம் போதும்… சுவையான ஆனியன் மஞ்சூரியன் தயார்!
இந்த பொடியை குழம்பு நன்கு கொதித்து கெட்டியாக வரும் நேரத்தில் சேர்த்து மீண்டும் ஒருமுறை கலந்து கொடுத்து கடாயில் ஓரங்களில் நல்லெண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விட வேண்டும். இறுதியாக கைப்பிடி அளவு கருவேப்பிலை மற்றும் மல்லி இலைகளை பொடியாக நறுக்கி சேர்த்து இறக்கினால் சுவையான வெந்தய குழம்பு தயார். இந்த குழம்பு 10 நாட்கள் ஆனாலும் கெட்டுப் போகாத காரணத்தினால் நாம் பதப்படுத்தி தேவைப்படும் நேரங்களில் சாப்பிட்டுக் கொள்ளலாம்.