பெரும்பாலும் கிராமங்களில் நான் ஒன்றுக்கு புதுவிதமான குழம்புகள் சமைக்கும் வழக்கம் இல்லை. மதிய வேளையோ அல்லது இரவு வேலையோ சமைக்கும் குழம்பு மறுநாள் வரை வைத்து சாப்பிடும் பழக்கம் தான் இன்று வரையும் உள்ளது. அப்படி இரண்டு நாள் ஆனாலும் கெட்டுப் போகாத, சுவை மாறாத குழம்பு ரெசிபி நம் வீடுகளில் சமைக்க விரும்பும் தாய்மார்களுக்கு தான் இந்த வெண்டைக்காய் பொரித்த குழம்பு ரெசிபி.. இந்த வெண்டைக்காய் பொரித்த குழம்பு சூடான சாதத்தில் வைத்து சாப்பிடும் பொழுது சுவை அமிர்தமாக இருக்கும். மேலும் இதனுடன் அப்பளம், முட்டை என வைத்து சாப்பிட்டால் விருந்து சாப்பிட்ட திருப்தியே கிடைக்கும். வாங்க எளிமையான முறையில் வெண்டைக்காய் பொரித்த குழம்பு செய்வதற்கான ரெசிபியை பார்க்கலாம்…
இந்த குழம்பு சமைப்பதற்கு முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடு படுத்திக் கொள்ளவும். எண்ணெய் சூடானதும் அரை தேக்கரண்டி கடுகு, அரை தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, கால் தேக்கரண்டி வெந்தயம், கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
கடுகு நன்கு பொரிந்ததும் ஐந்து பல் வெள்ளை பூண்டு சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். வெள்ளைப்பூண்டு பொன்னிறமாக மாறியதும் கொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் நன்கு பழுத்த ஒரு தக்காளி பழத்தை சேர்த்து வதக்கிக் கொள்ளலாம்.
தக்காளி வதங்கும் நேரத்தில் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் மற்றும் அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். தக்காளி மற்றும் வெங்காயம் நன்கு மசிந்து வரும் நேரத்தில் இரண்டு தேக்கரண்டி குழம்பு மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கிக் கொள்ளலாம்.
இந்த நேரத்தில் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெண்டைக்காய் ஒரு கப் சேர்த்துக் கொள்ளலாம். மசாலாவோடு சேர்த்து வெண்டைக்காயை ஒரு நிமிடம் வரை நன்கு வதக்க வேண்டும். ஒரு நிமிடம் கழித்து ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொடுத்து கொதிக்க விட வேண்டும்.
தண்ணீர் கொதித்து மசாலாக்களின் பச்சை வாசனை சென்றவுடன் எலுமிச்சை பழ அளவு ஊறவைத்த புளி கரைசல் சேர்த்துக் கொள்ளலாம். சேர்ந்து கொதிக்கும் நேரத்தில் தேங்காய் விழுதுகளை சேர்த்துக் கொள்ளலாம்.
இந்த தேங்காய் விழுதில் ஒரு கப் தேங்காய் துருவல், அரை தேக்கரண்டி கசகசா சேர்த்து மையாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். தேங்காய் விழுது சேர்த்த பிறகு குழம்பிற்கு தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொடுத்து கொதிக்க விட வேண்டும்.
கடாயின் ஓரங்களில் எண்ணை பிரிந்து வரை கொதிக்க வைக்க வேண்டும். இறுதியாக கைப்பிடி அளவு கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் சுவையான வெண்டைக்காய் பொரித்த குழம்பு தயார்.