பெரிய ரெஸ்டாரண்டுகளில் மட்டுமே கிடைக்கும் உருளைக்கிழங்கு பிரெஞ்ச் ப்ரைஸ் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஸ்னாக்ஸ் வகைகளில் ஒன்று. இதேபோன்று நம் வீடுகளிலும் அடிக்கடி செய்து கொடுத்து குழந்தைகளை மகிழ்விப்பதும் வழக்கம்தான். இந்த முறை உருளைக்கிழங்குக்கு பதிலாக வெண்டைக்காய் பயன்படுத்தி முறுமுறு பிரெஞ்ச் ப்ரைஸ் செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க.
முதலில் 200 கிராம் அளவுள்ள வெண்டைக்காய்களை நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது வெண்டைக்காயை நீளவாக்கில் மெல்லிசாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.
நறுக்கிய வெண்டைக்காய்களை ஒரு அகலமான பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளலாம். இதனுடன் அரை தேக்கரண்டி உப்பு, ஒன்றரை தேக்கரண்டி அரிசி மாவு, 2 தேக்கரண்டி ரவை, அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள், கால் தேக்கரண்டி சோம்பு, ஒரு தேக்கரண்டி கருஞ்சீரகம் சேர்த்து முதலில் கலந்து கொள்ள வேண்டும்.
இந்த கலவையில் லேசாக தண்ணீர் தெளித்து பிசைந்து கொள்ள வேண்டும். தண்ணீர் அதிகமாக சேர்க்க கூடாது. இந்த கலவை குறைந்தது 10 முதல் 15 நிமிடம் அப்படியே வைத்து விட வேண்டும்.
அடுத்ததாக ஒரு அகலமான தட்டில் இரண்டு தேக்கரண்டி மைதா மாவை பரப்பி வைத்துக் கொள்ள வேண்டும். பத்து நிமிடம் கழித்து ஊற வைத்திருக்கும் வெண்டைக்காய் மசாலாவை தனியாக பிரித்தெடுத்து தட்டில் இருக்கும் மைதாவில் ஒரு முறை பிரட்டி எடுத்துக் கொள்ளலாம்.
இப்பொழுது ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து சூடானதும் நாம் தயார் செய்து வைத்திருக்கும் வெண்டைக்காயி பொறிக்க வேண்டும். குறைந்தது நான்கு முதல் ஐந்து நிமிடம் மிதமான தீயில் நன்கு பொறித்தால் மட்டுமே வெண்டைக்காய் முறுமுறுவென இருக்கும். இப்பொழுது சுவையான வெண்டைக்காய் ஃப்ரெஞ்ச் ப்ரைஸ் தயார்.