அட இதுல கூட சட்னி செய்யலாமா என வாயை பிளக்க வைக்கும் சட்னி ரெசிபி! வெண்டைக்காய் சட்னி ரெசிபி இதோ…

பொதுவாக வெண்டைக்காய் வைத்து குழம்பு, கிரேவி, கூட்டு, பொரியல், பருப்பு கடைசல், வெண்டைக்காய் ப்ரை, வெண்டைக்காய் பச்சடி என பலவிதமான உணவுகள் செய்து சாப்பிட்டதுண்டு. வெண்டைக்காய் தொடர்ந்து நம் உணவில் எடுத்துக் கொள்வதன் மூலமாக பலவித ஊட்டச்சத்துக்களும் நமக்கு முழுமையாக கிடைக்க வழிவகை செய்கிறது. ஆனால் இந்த வெண்டைக்காய் சிலருக்கு அதன் வழவழப்பு தன்மையின் காரணமாக பிடிப்பது இல்லை. அப்படி பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிட வேண்டும் என்பதற்காக வெண்டைக்காய் வைத்து அருமையான சட்னி செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க..

ஒரு அகலமான கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் ஒரு தேக்கரண்டி கடலைப்பருப்பு, ஒரு தேக்கரண்டி உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும். இரண்டு பருப்பும் நிறம் மாறியதும் பத்து முதல் 15 சின்ன வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.

வெங்காயம் வதங்கும் நேரத்தில் ஐந்து முதல் 8 வெள்ளைப் பூண்டுகள் சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். வெள்ளைப்பூண்டு பொன்னிறமாக மாறியதும் காரத்திற்கு ஏற்ப ஐந்து முதல் 8 காய்ந்த வத்தல், பெரிய நெல்லிக்காய் அளவு புளி சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது வதக்கிய இந்த பொருட்களை தனியாக ஒரு பாத்திரத்தில் மாற்றி ஆற வைத்து விடலாம். அடுத்ததாக அதே கடாயில் பொடியாக நறுக்கிய ஒரு கப் வெண்டைக்காய் சேர்த்து வதக்க வேண்டும். வெண்டைக்காய் வதங்கும் நேரத்தில் கால் தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளலாம்.

குறைந்தது மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் வரை மிதமான தீயில் வெண்டைக்காயை நன்கு மொறுமொறுவென வரும் வரை வதக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் பிறகு நாம் முதலில் வதக்கிய பொருட்கள் மற்றும் வெண்டைக்காய் இவற்றை மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளலாம்.

இதனுடன் கைப்பிடி அளவு தேங்காய், அரை தேக்கரண்டி கல் உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் கலந்து நன்கு மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது சட்னி தயாராக மாறி உள்ளது இதற்கு ஒரு சிறிய தாளிப்பு ஒன்று தயார் செய்து கொள்ளலாம்.

இதுவரை சாப்பிடாத அசத்தல் சுவையின் ரெஸ்டாரண்ட் தரத்தில் மஷ்ரூம் 65 கிரேவி!

ஒரு சிறிய கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் அரை தேக்கரண்டி கடுகு, அரை தேக்கரண்டி கடலைப்பருப்பு, அரை தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, கைப்பிடி அளவு கருவேப்பிலை, இரண்டு காய்ந்த வத்தல், அரை தேக்கரண்டி பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து நாம் சட்னியில் கலந்து கொள்ளலாம்.

இப்பொழுது சுவையான வெண்டைக்காய் சட்னி தயார். இந்த சட்னியை சாப்பிடுபவர்கள் என்ன சட்னி என கேட்கும் அளவிற்கு சுவையானதாகவும் மீண்டும் வேண்டும் என கேட்கும் அளவிற்கு சிறப்பாகவும் இருக்கும்.