விரத நாட்களில் வெண்டைக்காய் சாம்பார் இப்படி செய்து பாருங்கள்…!

விரத நாட்கள், பூஜை நாட்கள், பண்டிகைகள் என்றாலே வீட்டில் கட்டாயம் சாம்பார் இடம்பிடித்து விடும். சாம்பார் ஒவ்வொரு முறையும் ஒரே மாதிரி வைக்காமல் வித்தியாசமாக வைக்க வேண்டும் என பலரும் நினைப்பதுண்டு. அப்படி வித்தியாசமாக ஏதாவது சாம்பார் வைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த வெண்டைக்காய் சாம்பாரை முயற்சி செய்து பார்க்கலாம். இந்த வெண்டைக்காய் சாம்பார் செய்வது சுலபம். அதே சமயம் சுவையும் அருமையாக இருக்கும். வாருங்கள் வெண்டைக்காய் சாம்பார் எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.

கமகமக்கும் முருங்கைக்காய் சாம்பார்…! முருங்கைக்காய் சாம்பார் செய்வது இவ்வளவு சுலபமா?

வெண்டைக்காய் சாம்பார் செய்வதற்கு முதலில் ஒரு குக்கரில் அரை கப் அளவு துவரம் பருப்பை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு வேக வைத்து கொள்ள வேண்டும். எலுமிச்சை பழ அளவு புளியை ஊற வைத்துக் கொள்ளவும். கால் கிலோ அளவு வெண்டைக்காயை தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து இதனை ஒரு வெள்ளை துணியால் துடைத்து அதன் பின் நறுக்கி வைக்க வேண்டும். 20 சின்ன வெங்காயம், எட்டு பல் பூண்டு, ஒரு தக்காளி ஆகியவற்றை நறுக்கி வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் காய வைத்து எண்ணெய் காய்ந்ததும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெண்டைக்காயை போட்டு வெண்டைக்காயின் வழவழப்பு தன்மை போக வதக்க வேண்டும்.வெண்டைக்காயை நன்கு வதக்கிய பிறகு இதனை தனியாக வைத்து விடலாம். இப்பொழுது அதே கடாயில் மூன்று மேஜை கரண்டி எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் இதனுடன் ஒரு தேக்கரண்டி கடுகு, ஒரு தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, அரை தேக்கரண்டி வெந்தயம், அரை தேக்கரண்டி சோம்பு, சிறிதளவு பெருங்காயத்தூள், சிறிதளவு கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். இவற்றை தாளித்த பிறகு நறுக்கி வைத்திருக்கும் பூண்டு மற்றும் வெங்காயத்தை போட்டு வதக்க வேண்டும்.

சாம்பார் பொடி இப்படி வீட்டில் நீங்களே தயாரித்து பாருங்கள்… ஒரு போதும் கடையில் இனி வாங்க மாட்டீர்கள்…

வெங்காயம் வதங்கியதும் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியையும் சேர்த்து வதக்கவும். இப்பொழுது அரை ஸ்பூன் மஞ்சள் தூள், 4 ஸ்பூன் சாம்பார் பொடி ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். ஏற்கனவே வதக்கி வைத்திருக்கும் வெண்டைக்காயையும் சேர்த்து வதக்கிய பிறகு கரைத்து வைத்திருக்கும் புளியை ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும். நன்கு கொதித்த பிறகு நாம் வேகவைத்து வைத்திருக்கும் துவரம் பருப்பை சேர்த்து கொதிக்க விடவும். சாம்பார் சற்று கெட்டியாக வந்ததும் இறக்கி விடலாம்.

அவ்வளவுதான் சுவையான வெண்டைக்காய் சாம்பார் தயாராகிவிட்டது…!