காலை உணவுக்கு இந்த மாதிரி வெண் பொங்கலோட கத்திரிக்காய் கொத்சு செய்தீங்கன்னா கொஞ்சம் கூட மிச்சம் வைக்க மாட்டாங்க!

தினமும் காலையில் என்ன செய்யுறது என்று குழப்பமா இருக்கா… ஒரு நாளைக்கு வெண் பொங்கலோடா கத்திரிக்காய் கொத்சு செய்துப் பாருங்கள்…

வெண் பொங்கல்:

ஒரு கப் பாசி பருப்பை லேசாக வறுத்து அதை இரண்டு கப் பச்சரிசியுடன் இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் அதில் எட்டு கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து குக்கரில் போட்டு மூன்று விசில் வரும் வரை வேக விடவும்.

ஒரு வாணலில் ஒரு மேஜைக் கரண்டி நெய் விட்டு, அரைத் தேக்கரண்டி இஞ்சித் துருவல், ஒன்றரைத் தேக்கரண்டி கரகரப்பாக பொடித்த மிளகு, ஒரு மேஜைக் கரண்டி சீரகம், சிறிதளவு கறிவேப்பிலை, பதினைந்து வறுத்த முந்திரி சேர்த்து தாளித்து குக்கரில் கொட்டி கிளறவும். அவ்வளவுதான் மணமும் சுவையும் நிறைந்த வெண் பொங்கல் தயார்.

கத்திரிக்காய் கொத்சு:

மூன்று கத்திரிக்காய்களை எடுத்துக் கொண்டு அதன்மேல் எண்ணெய் தடவி அடுப்பில் சுட்டு, ஆறியவுடன் தோலை நீக்கி நன்றாக மசிக்கவும்.

வாணலியில் 1 மேஜைக் கரண்டி நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் அரைத் தேக்கரண்டி கடுகு, அரைத் தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, இரண்டு காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து, பொடியாக நறுக்கிய இரண்டு வெங்காயங்களை சேர்த்து, ஒரு கீறிய பச்சைமிளகாய் போட்டு வதக்கி, அரை கப் புளி கரைசலை விடவும்.

அத்துடன் கால் தேக்கரண்டி மஞ்சள் தூள், அரைத் தேக்கரண்டி வெல்லம், தேவையான அளவு உப்பு போட்டு கொதிக்க விட வேண்டும்.

சிறிது கொதித்ததும் மசித்த கத்தரிக்காய் கலவை, சிறிதளவு கொத்தமல்லி, சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து கிளறவும். சிறிது கெட்டியானவுடன் இறக்கவும். சுவையான கத்தரிக்காய் கொத்சு தயார்.

வெண் பொங்கலுடன் கத்திரிக்காய் கொத்சு சேர்த்து பரிமாறி அசத்துங்கள்.