நான்கு வீட்டிற்கு சேர்த்து மணக்கும் ஆந்திரா ஸ்டைல் வெஜ் புலாவ் ரெசிபி!

பிரியாணி சாப்பிட்டு சலித்த நேரங்களில் அதே சுவையில் சற்று மாறுதலாக சாப்பிட தோன்றும் பொழுது இந்த வெஜ் புலாவ் ரெசிபி மிகவும் கச்சிதமான பொருத்தமாக இருக்கும். இந்த முறை வீட்டில் அரைத்து மசாலா தயார் செய்து நல்ல காரசாரமாக ஆந்திரா ஸ்டைலில் வெஜ் புலாவ் வீட்டில் செய்வதற்கான விளக்கத்தை இந்த தொகுப்பை பார்க்கலாம் வாங்க.

முதலில் வெஜ் புலாவ் செய்வதற்கு தேவையான காய்கறிகளை எடுத்து கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். நமக்கு தேவையான கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ், பச்சை பட்டாணி, காலிஃப்ளவர், பட்டர் பீன்ஸ் என தேவையான காய்கறிகளை நன்கு கழுவி சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளலாம்.

அடுத்து ஒரு அகலமான குக்கரில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் மூன்று தேக்கரண்டி நெய் சேர்த்து சூடுபடுத்திக் கொள்ளலாம். இதில் பிரியாணி இலை, , பட்டை, கிராம்பு, , ஏலக்காய், பெருஞ்சீரகம், அண்ணாச்சி பூ, கல்பாசி பிரியாணி மசாலாக்களை தாளித்து கொள்ள வேண்டும்.

அடுத்த பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். வெங்காயம் வதங்கும் நேரத்தில் பச்சை மிளகாய் இரண்டு சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் நான் நறுக்கி வைத்திருக்கும் காய்கறிகளை சேர்த்து வதக்க வேண்டும்.

மிதமான தீயில் காய்கறிகளை இரண்டு நிமிடம் வரை வதக்க வேண்டும். இந்த நேரத்தில் பிரியாணிக்கு தேவையான மசாலாவை தயார் செய்து கொள்ளலாம். அதற்காக ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு சிறிய துண்டு பட்டை இரண்டு, கிராம்பு மூன்று, ஏலக்காய் 2, மல்லி ஒரு தேக்கரண்டி, சீரகம் ஒரு தேக்கரண்டி, மிளகு அரை தேக்கரண்டி, ஜாதிப்பூ சிறிதளவு, கைப்பிடி அளவு புதினா மற்றும் கொத்தமல்லி இலை, நன்கு பழுத்த தக்காளி பழம் ஒன்று, ஒரு சிறிய துண்டு இஞ்சி 5 பல் வெள்ளை பூண்டு சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

கார சாரத்திற்கு குறைவே இல்லாமல் பாரம்பரிய முறையில் அதே சுவையின் மிளகு குழம்பு! ரெசிபி இதோ..

இப்பொழுது காய்கறிகள் பாதியாக வெந்ததும் நாம் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை குக்கரில் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். மசாலாவில் இருந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கிக் கொள்ளலாம். அதன் பிறகு ஒரு கப் சாதத்திற்கு இரண்டு கப் தண்ணீர் வீதம் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொதிக்க விட வேண்டும்.

தண்ணீர் கொதித்து வரும் நேரத்தில் அரைமணி நேரம் ஊற வைத்திருக்கும் அரிசியை சேர்த்துக் கொள்ளலாம். இப்பொழுது இறுதியாக உப்பு சரிபார்த்து ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து கிளறி மூன்று விசில்கள் வரும் வரை வேக வைக்க வேண்டும். விசில்கள் வந்து அழுத்தம் குறைந்ததும் மீண்டும் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து கிளறி கொடுத்து இறக்கினால் சுவையான ஆந்திரா ஸ்டைல் காரசாரமான மசாலா புலாவ் தயார்.