புரட்டாசி மாதம் வந்தாச்சு…அசைவம் சாப்பிட முடியாதவர்களுக்கு சைவத்தில் ஈரல் கிரேவி!

புரட்டாசி மாதத்தில் பெரும்பாலான வீடுகளில் அசைவ உணவு சமைப்பதும் இல்லை சாப்பிடுவதும் இல்லை. இந்த மாதம் முழுக்க சைவ உணவுகள் மட்டும் தான். ஞாயிற்றுக்கிழமை காலையில் அசைவம் இல்லாமல் வெறுப்புடன் இருக்கும் பலருக்கு இந்த ரெசிபி மிகவும் உதவியாக இருக்கும். அசைவ ஈரல் சுவையில் சிறிதும் மாற்றம் இல்லாமல் சைவ ஈரல் கிரேவி ரெசிபி. எளிமையான முறையில் இந்த ரெசிபி செய்வதற்கான விளக்கத்தை இதில் பார்க்கலாம்…

ஒரு கப் பச்சை பயிரை சனிக்கிழமை இரவு நன்கு கழுவி சுத்தம் செய்து தேவையான அளவு தண்ணீர் கலந்து ஊற வைத்துக் கொள்ள வேண்டும். ஞாயிற்றுக்கிழமை காலையில் மீண்டும் ஒருமுறை கழுவி சுத்தம் செய்து அதை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளலாம்.

ஊறவைத்த பச்சைப்பயிறுடன் ஒரு பச்சை மிளகாய், அரை தேக்கரண்டி மிளகு, அரை தேக்கரண்டி சீரகம், அரை தேக்கரண்டி கல் உப்பு சேர்த்து நன்கு மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். அரைக்கும் பொழுது தண்ணீர் சேர்க்க அவசியம் இல்லை. தேவைப்பட்டால் சிறிதளவு மட்டுமே சேர்த்துக் கொள்ளலாம்.

இப்பொழுது அரைத்து வைத்திருக்கும் மாவை நாம் இட்லி தட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதாவது இட்லி தட்டில் எண்ணெய் தடவி இட்லி போல இந்த மாவை ஊற்றி வேக வைக்க வேண்டும். நீராவியில் இந்த மாவு 10 முதல் 15 நிமிடம் நன்கு வெந்து வர வேண்டும்.

அப்பொழுது நன்கு வெந்திருக்கும் பாசிப்பயிறு மாவு இட்லியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்து ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் பட்டை இரண்டு துண்டு, கிராம்பு 3, பிரியாணி இலை ஒன்று, அரை தேக்கரண்டி பெருஞ்சீரகம், அரை தேக்கரண்டி சீரகம், அரை தேக்கரண்டி மிளகு, ஒரு அன்னாச்சி பூ சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

இதை அடுத்து கைப்பிடி அளவு கருவேப்பிலை, இரண்டாக கீறிய இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். பச்சை மிளகாய் எண்ணெயோடு சேர்த்து வதங்கியதும் பொடியாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ளலாம்.

வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் இரண்டு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கிக் கொள்ளவும். இஞ்சி பூண்டு விழுதுவின் பச்சை வாசனை சென்றவுடன் பொடியாக நறுக்கிய இரண்டு பழுத்த தக்காளி பழம் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.

தக்காளி நன்கு மசிந்து வரும் நேரத்தில் வேகவைத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய பாசிப்பயிறு துண்டுகளை கடாயில் சேர்த்துக் கொள்ளலாம். இதை அடுத்து மசாலா பொருட்களை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இதற்காக ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள், அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், இரண்டு தேக்கரண்டி தனி மிளகாய் தூள், ஒரு தேக்கரண்டி கரம் மசாலா, அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

கோதுமை மாவு வைத்து சப்பாத்தி மற்றும் பூரி இதைத் தாண்டி பாஸ்தா செய்யலாம் வாங்க!

மசாலாவின் பச்சை வாசனை சென்றவுடன் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும். ஐந்து நிமிடம் கழித்து அரை தேக்கரண்டி மிளகுத்தூள் சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான சைவ ஈரல் கிரேவி தயார். பரிமாறுவதற்கு முன்பாக கொடியாக நறுக்கிய மல்லி இலை மற்றும் புதினா இலை தூவி பரிமாறினால் சுவை அமிர்தமாக இருக்கும்.

அசைவ ஈரல் கிரேவியுடன் போட்டி போடும் அளவிற்கு இந்த இந்த பாசிப்பயிறு மாவு சைவ ஈரல் கிரேவி தரமாக இருக்கும்.

Exit mobile version