அசைவ உணவுகள் விரும்பி சாப்பிடும் பலருக்கும் ஈரல் சாப்பிட பிடிப்பதில்லை. அதிலிருந்து வரும் வாசனை அதன் நிறம் என பல காரணங்கள் உள்ளது. ஆனால் ஈரலில் உடலுக்கு தேவையான பலவிதமான ஊட்டச்சத்துக்கள் உள்ளது. அதே நேரத்தில் சைவம் சாப்பிடுபவர்களுக்கு அசைவ ஈரலில் உள்ள அதை ஊட்டச்சத்தை கொடுக்கும் உணவு ரெசிபி குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். அசைவ ஈரலுக்கு இணையான சுவை மற்றும் சத்து நிறைந்த சைவ ஈரல் தொக்கு. இந்த ரெசிபி செய்வதற்கான எளிமையான விளக்கம் இதோ…
ஒரு கப் பாசிப்பருப்பை நன்கு கழுவி சுத்தம் செய்து நான்கு முதல் ஐந்து மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். 5 மணி நேரம் கழித்து நன்கு ஊறி இருக்கும் பாசிப்பருப்பை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஒரு தேக்கரண்டி சீரகம், அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் நன்கு மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
அரைத்த பாசிப்பருப்பு விழுதுவை உள்பக்கமாக எண்ணெய் தடவிய பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ள வேண்டும். இந்த பாத்திரத்தை இட்லி வேகும் பாத்திரத்தில் வைத்து 10 நிமிடம் நன்கு நீராவியில் வேக வைக்க வேண்டும்.
பாசிப்பயிறு மாவு நன்கு வெந்து கெட்டியாக மாறியதும் நமக்கு தேவையான வடிவத்தில் நறுக்கிக் கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம், பொடியாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.
வெங்காயம் வதங்கும் நேரத்தில் கைபிடி அளவு கறிவேப்பிலை சேர்த்துக் கொள்ளலாம். வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இஞ்சி பூண்டு விழுதுவின் பச்சை வாசனை சென்றவுடன் அரை தேக்கரண்டி உப்பு, அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள், ஒரு தேக்கரண்டி மட்டன் மசாலா சேர்த்து நல்ல வதக்கி கொள்ள வேண்டும்.
மசாலா வெந்து வருவதற்காக அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கிளற வேண்டும். மசாலாக்களின் பச்சை வாசனை செல்லும் வரை கொதிக்க விட வேண்டும். இதன் பிறகு நாம் நறுக்கி வைத்திருக்கும் பாசிப்பயிறு மாவு துண்டுகளை கடாயில் சேர்த்து கிளற வேண்டும்.
தண்ணீர் நன்கு பற்றி கெட்டியான பதத்திற்கு வந்தவுடன் கைபிடி அளவு மல்லி இலைகளை தூவி இறக்கினார் சுவையான சைவ ஈரல் தொக்கு தயார்.