கறி இல்லாமல் மட்டன் குழம்பு சுவையில் அசத்தலான சைவ கறி குழம்பு!

அசைவ உணவுகளில் மட்டன், சிக்கன் குழம்பிற்கு தனி மவுசு தான். ஆனால் வீட்டில் கறி இல்லாத சமயங்களில் அதை சுவையில் சைவ கறி குழம்பு வைத்து சாப்பிட வேண்டுமா? அதற்கான எளிமையான ரெசிபி இதோ..

ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் பிரியாணி இலை 1, அரை தேக்கரண்டி பெருஞ்சீரகம், அரை தேக்கரண்டி சீரகம், ஏலக்காய் 2, பட்டை இரண்டு துண்டு, அண்ணாச்சி பூ சிறிய துண்டு சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.

அடுத்ததாக ஒரு பெரிய வெங்காயத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கடாயில் சேர்த்துக் கொள்ளவும். இதனுடன் ஒரு பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் நன்கு பழுத்த ஒரு தக்காளி பழத்தை பொடியாக நறுக்கி சேர்த்து வதக்க வேண்டும்.

அதனுடன் கைப்பிடி அளவு மல்லி இலைகளை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளலாம். தக்காளி மற்றும் வெங்காயம் நன்கு வதங்கியதும் ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து வதக்க வேண்டும்.

அடுத்ததாக அரை தேக்கரண்டி சீரகத்தூள், அரை தேக்கரண்டி தனியா தூள், ஒரு தேக்கரண்டி கரம் மசாலா பொடி, ஒரு தேக்கரண்டி தனி மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்து மசாலாக்களின் பச்சை வாசனை செல்லும்வரை வதக்கிக் கொள்ளலாம்.

மசாலாக்களின் பச்சை வாசனை சென்றவுடன் 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொடுத்து மிதமான தீயில் மூடி போட்டு கொதிக்க வைக்க வேண்டும். இரண்டு முதல் மூன்று நிமிடம் மிதமான தீயில் மசாலாக்கள் கொதித்தபின் திறந்து பார்த்தால் நன்கு எண்ணெய் பிரிந்து தொக்கு பதத்திற்கு வந்து விடும்.

இந்த நேரத்தில் மீண்டும் குழம்பிற்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் ஐந்து முதல் ஏழு நிமிடங்கள் வரை கொதிக்க வைக்க வேண்டும். அந்த நேரத்தில் ஒரு அகலமான பாத்திரத்தில் 250 கிராம் கடலை மாவு எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் கால் தேக்கரண்டி தனி மிளகாய் தூள், 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள், கால் ஸ்பூன் சீரகத்தூள், , கால் ஸ்பூன் கரம் மசாலாத்தூள் , அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

இந்த மாவு கலவையுடன் இரண்டு தேக்கரண்டி எண்ணெய், ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து மீண்டும் ஒரு முறை கலந்து கொள்ள வேண்டும். இந்த மாவில் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.

உடலுக்கு குளிர்ச்சி மற்றும் இரும்பு சத்து நிறைந்த தேங்காய்ப்பால் வைத்து அருமையான வெஜிடபிள் பிரிஞ்சி ரைஸ்!

குறிப்பாக சப்பாத்தி மாவு பதத்திற்கு மாவு தயார் செய்யக்கூடாது. அதற்கு பதிலாக சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து பட்டும் படாமல் உதிரியாக மாவு பிசைந்து கொள்ள வேண்டும். இந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக தனது விருப்பத்திற்கு ஏற்றவாறு வடிவத்தில் மாற்றி தட்டில் பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த உருண்டைகளை எண்ணெயில் சேர்த்து பொன்னிறமாக வரும்வரை பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த பொரித்த மசாலா உருண்டைகளை கடாயில் கொதித்துக் கொண்டிருக்கும் மசாலா கலவையுடன் சேர்த்துக் கொள்ளலாம்.
உருண்டைகளை குழம்பில் சேர்த்தவுடன் அடுப்பை அணைத்து விட வேண்டும். இல்லை என்றால் உருண்டைகள் கரைந்து குழம்பில் மாவு போல மாறிவிடும். இறுதியாக கைப்பிடி அளவு கொத்தமல்லி தலைகளை பொடியாக நறுக்கி சேர்த்து இறக்கினால் சுவையான சைவ கறி குழம்பு தயார்.