மட்டன் வைத்து எந்த வகையான ரெசிபிகள் செய்தாலும் சுவையில் அசத்தலாகவே இருக்கும். குறிப்பாக மட்டன் வருவல், குழம்பு, பிரியாணி என அனைத்தும் ஒன்றுடன் ஒன்று போட்டி போடும் அளவிற்கு சுவையில் சிறப்பாக இருக்கும். வாங்க இந்த முறை பிரியாணிக்கு பெயர் போன வாணியம்பாடி ஸ்டைல் மட்டன் பிரியாணி வீட்டில் எளிமையான முறையில் அதே சுவையில் செய்வதற்கான விளக்கத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்த வகையான பிரியாணி செய்வதற்கு நம் மட்டன் வாங்கும் பொழுது ஒரு கிலோ அளவு மட்டன் எடுத்துக் கொள்ளும் பொழுது குறைந்தது 100 கிராம் அளவிற்கு கொழுப்பு குறையாமல் இருப்பதாக வாங்கிக் கொள்ள வேண்டும். அடுத்ததாக அரை மணி நேரத்திற்கு முன்பாகவே சீரக சம்பா அரிசி அல்லது பாஸ்மதி அரிசியை ஊற வைத்துக் கொள்ளலாம்.
அடுத்து ஒரு அகலமான கடாயில் நான்கு தேக்கரண்டி ரீபைண்ட் ஆயில், 4 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பெருஞ்சீரகம் என பிரியாணி மசாலாக்கள் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். அடுத்து நீளவாக்கில் பொடியாக நறுக்கிய நான்கு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ளலாம்.
வெங்காயம் வதங்கும் நேரத்தில் இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். அடுத்து இரண்டு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை செல்லும்வரை வதக்கிக் கொள்ளலாம். இந்த நேரத்தில் நாம் கழுவி சுத்தம் செய்து வைத்திருக்கும் மட்டன் கறியையும் சேர்த்து இஞ்சி பூண்டு விழுதுடன் நன்கு ஒரு சேர கலந்து கொடுத்து வதக்க வேண்டும்.
குறைந்தது ஐந்து முதல் பத்து நிமிடம் மிதமான தீயில் மட்டன் சுருங்கி வரும் வரை வதக்கிக் கொள்ளலாம். அடுத்து மசாலா பொருட்களை சேர்த்துக் கொள்ளலாம். இதற்காக இரண்டு தேக்கரண்டி மிளகாய் தூள், ஒரு தேக்கரண்டி உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
அடுத்ததாக நன்கு பழுத்த நான்கு தக்காளி பழங்களை அரைத்து விழுதலாக கடாயில் சேர்த்துக் கொள்ளலாம். இதனுடன் கைப்பிடி அளவு கொத்தமல்லி இலை, கைப்பிடி அளவு புதினா இலை சேர்த்து நன்கு வதக்கி கொள்ள வேண்டும். கடாயில் ஓரங்களில் எண்ணை பிரிந்து வரும் நேரத்தில் ஒரு கப் கெட்டி தயிர் சேர்த்துக் கொள்ளலாம்.
தயிர் சேர்த்த பிறகு மட்டன் இறைச்சி வெந்து வருவதற்கு தேவையான அளவு தண்ணீர் கலந்து மூடி போட்டு கொதிக்க விட வேண்டும். மட்டன் வெந்து வரும் நேரத்தில் மற்றொரு பக்கத்தில் ஒரு அகலமான பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து அதில் ஊற வைத்து அரிசியை சேர்த்துக் கொள்ளலாம்.
அட இதுல கூட ஊறுகாய் செய்யலாமா… மூன்று மாதம் ஆனாலும் கெட்டுப் போகாத முட்டை ஊறுகாய்!
அரிசியுடன் கொத்தமல்லி மற்றும் புதினா இலைகள், அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து அரை பக்குவம் வரும் வரை வேக வைத்து தண்ணீரை வடிகட்டிக் கொள்ளலாம். இப்பொழுது இந்த அரிசியை மட்டன் வந்துள்ளதா என ஒரு முறை சரிபார்த்த பிறகு கடாயில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பாதியாக வெந்த அரிசி சேர்த்து நன்கு கலந்து கொடுத்து தாராளமாக நெய் சேர்த்து மூடி போட்டு வேக வைக்க வேண்டும். மிதமான தீயில் 20 நிமிடம் தம் போட்டு வேகவைத்து கொள்ளலாம். 20 நிமிடம் கழித்து குறைந்தது பத்து நிமிடம் அப்படியே ஆற வைக்க வேண்டும் அதன் பிறகு நாம் கிளறி சாப்பிட பரிமாறலாம். இப்பொழுது சுவையான வாணியம்பாடி மட்டன் பிரியாணி தயார்.