பொதுவாக வாழைப்பூவில் இருக்கும் துவர்ப்பு சுவை காரணமாக பலர் இதை விரும்பி சாப்பிடுவது இல்லை. வாழைப்பூவில் பலவிதமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. வாய் துர்நாற்றம், வாய்ப்புண், அஜீரண கோளாறு, உப்புச்சத்து போன்றவற்றிற்கு வாழைப்பூ சிறந்த அருமருந்தாக உள்ளது. இந்த வாழைப்பூவை எப்பொழுதும் போல செய்யாமல் சற்று வித்தியாசமான முறையில் பிரியாணி செய்யும் பொழுது வீட்டில் உள்ளவர்கள் எளிமையாக இதை சாப்பிட்டு விடுவார்கள். வாழைப்பூ பிரியாணி செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ…
ஒரு கப் வாழைப்பூவை முதலில் நன்கு கழுவி சுத்தம் செய்து அதில் உள்ள நரம்புகளை நீக்கி பொடியாக நறுக்கி அரிசி கலைந்த தண்ணீர் அல்லது மோரில் போட்டு வைக்க வேண்டும். அப்பொழுதுதான் வாழைப்பூவின் நிறம் மாறாமல் துவர்ப்பு சுவை குறைவாகவும் இருக்கும்.
இப்பொழுது ஒரு குக்கரில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் மற்றும் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பெருஞ்சீரகம், பிரியாணி இலை, அண்ணாச்சி பூ சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து நீளவாக்கில் பொடியாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கிக் கொள்ளலாம்.
இஞ்சி பூண்டு விழுதுவின் பச்சை வாசனை சென்றவுடன் நன்கு பழுத்த ஒரு தக்காளி பழத்தை பொடியாக நறுக்கி கடாயில் சேர்த்து விளக்க வேண்டும். தக்காளி பழம் நன்கு வதங்கியதும் 10 முதல் 15 பலாக்கொட்டைகளை சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். பலாக்கொட்டைகளின் தோள்களை நீக்கி இரண்டு துண்டுகளாக நறுக்கி கடாயில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது மசாலா பொருட்களை சேர்த்துக் கொள்ளலாம். மிளகாய் தூள் ஒரு தேக்கரண்டி, மல்லித்தூள் அரை தேக்கரண்டி, மஞ்சள் தூள் கால் தேக்கரண்டி, ஒருத்தி கரண்டி தயிர், ஒரு தேக்கரண்டி உப்பு, கைப்பிடி அளவு புதினா இலைகளை சேர்த்து வதக்க வேண்டும்.
ஒரு நிமிடம் நன்கு வதக்கி கொடுத்து 10 நிமிடம் மூடி போட்டு மிதமான தீயில் வேக வைக்க வேண்டும். இப்பொழுது பலாக்கொட்டை நன்கு வதங்கி உப்பு, காரம் அதில் சேரும். பத்து நிமிடம் கழித்து பலாக்கொட்டை வெந்துள்ளதா என்பதை ஒரு முறை சரி பார்த்து நாம் நறுக்கி வைத்திருக்கும் வாழைப்பூவை கடாயில் சேர்த்துக் கொள்ளலாம்.
ஒரு நிமிடம் நன்கு மசாலாக்களுடன் வாழைப்பூவே வதக்கிய பிறகு ஒரு கப் ஊற வைத்திருக்கும் பாஸ்மதி அரிசியை சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு கப் அரிசிக்கு ஒன்றரை கப் வீதம் தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இறுதியாக மீண்டும் ஒருமுறை உப்பு சரிபார்த்துக் கொண்டு ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து கிளறி குக்கரை முடிவிட வேண்டும். மிதமான தீயில் மூன்று விசில்கள் வேக வைத்து இறக்கினால் சுவையான வாழைப்பூ பிரியாணி தயார்..