இட்லி, தோசை, ஆப்பம், இடியாப்பம் என அனைத்திற்கும் எப்போதும் ஒரே போல சட்னி சாம்பார் வகைகள் செய்யாமல் சற்று வித்தியாசமாக சாப்பிட தோன்றும் பொழுது இந்த வடகறி மிகவும் உதவியாக இருக்கும். இட்லி சாப்பிட பிடிக்காதவர்கள் கூட வடகறி வைத்து சாப்பிடும் பொழுது கணக்கில்லாமல் சாப்பிட வாய்ப்புள்ளது. அந்த அளவிற்கு இந்த வடகறியின் சுவை நல்ல காரசாரமாக சாப்பிட தூண்டும் விதத்தில் சிறப்பாக இருக்கும். வாங்க எளிமையான முறையில் சைதாப்பேட்டை ஸ்பெஷல் வடகறி நம் வீட்டில் செய்வதற்கான விளக்கத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
முதலில் ஒரு கப் கடலைப்பருப்பு எடுத்து நன்கு கழுவி சுத்தம் செய்து தேவையான அளவு தண்ணீர் கலந்து குறைந்தது 2 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். இரண்டு மணி நேரம் கழித்து மீண்டும் தண்ணீரை வடிகட்டி ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளலாம்.
இப்பொழுது அந்த மிக்ஸி ஜாரில் ஊற வைத்த கடலைப்பருப்பு, மூன்று பல் வெள்ளைப்பூண்டு, ஒரு காய்ந்த வத்தல், அரை தேக்கரண்டி பெருஞ்சீரகம், அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு அரைக்க வேண்டும். தண்ணீர் சேர்க்க அவசியம் இல்லை அதுபோல மாவு மையாக அரைக்க வேண்டிய அவசியமும் இல்லை.
அதற்கு பதிலாக இந்த கடலை பருப்பு மாவை சற்று கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு ஒரு தோசை கல்லை அடுப்பில் வைத்து மிதமான தீயில் சூடு படுத்திக் கொள்ளலாம். இப்பொழுது நாம் அரைத்து வைத்திருக்கும் கடலை பருப்பு மாவை உருண்டைப்படுத்தி தோசை கல்லில் சேர்த்து தோசை போல தட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.
முன்னும் பின்னும் சிறிதளவு எண்ணெய் சேர்த்து நன்கு வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அடுத்ததாக ஒரு குக்கரின் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் ஒரு சிறிய துண்டு பட்டை, 3 கிராம்பு, இரண்டு ஏலக்காய், ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம், இரண்டு பிரியாணி இலை சேர்த்து தாளித்துக் கொள்ளலாம்.
அடுத்ததாக பொடியாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். பெரிய வெங்காயம் நன்கு வதங்கிய பிறகு ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளலாம். அடுத்ததாக இரண்டாக கீறிய இரண்டு பச்சை மிளகாய், கைப்பிடி அளவு புதினா இலைகள் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.
புதினா இலைகள் பாதியாக வதங்கிய பிறகு நன்கு பொடியதாக நறுக்கிய இரண்டு தக்காளி பழம் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். தக்காளி நன்கு மசிந்த பிறகு நாம் தோசைக்கல்லில் வேக வைத்திருக்கும் கடலைப்பருப்பு மாவை சிறு சிறு துண்டுகளாக உடைத்து சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பாட்டியின் அதே கைப்பக்குவத்தில் ஆட்டுக்கால் சூப் குழம்பு! ரகசிய ரெசிபி இதோ….
மசாலா பொருட்களை சேர்த்துக் கொள்ளலாம். இதற்காக ஒரு தேக்கரண்டி தனி மிளகாய் தூள், அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், அரைத்தக்கரண்டி கரம் மசாலாத்தூள், அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இதனுடன் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி விட வேண்டும்.
இரண்டு விஷல்கள் வரும் வரை வேக வைத்து இறக்கினால் சுவையான வடகறி தயார். இறுதியாக கைப்பிடி அளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து கொடுத்து பரிமாறினால் சாப்பிடும் பொழுது மனமும் சுவையும் சூப்பராக இருக்கும்.