முதுகெலும்புகளை பலப்படுத்தும் புரோட்டின் சத்து அதிகமாக நிறைந்த உளுந்தம் பால்… ரெசிபி இதோ!

குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் முதல் 40 வயதை கடந்து மாதவிடாய் காரணமாக சில பிரச்சனைகளை சந்தித்து வரும் பெண்கள் என அனைவருக்கும் முதுகெலும்பு சார்ந்த பிரச்சனைகள் இருப்பது வழக்கமான ஒன்று. இந்த பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக புரோட்டின் சத்து நிறைந்த உளுந்து வைத்து சத்து நிறைந்த உளுந்து பால் செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

முதலில் ஒரு கப் உளுந்தம் பருப்பை நன்கு கழுவி சுத்தம் செய்து மூன்று மணி நேரம் தேவையான அளவு தண்ணீர் கலந்து ஊற வைத்துக் கொள்ள வேண்டும். இந்த முறை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப கருப்பு உளுந்து அல்லது தோல் நீக்கிய வெள்ளை உளுந்து என நம் விருப்பத்திற்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ளலாம்.

மூன்று மணி நேரம் கழித்து மீண்டும் ஒரு முறை கழுவி சுத்தம் செய்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து மாவை நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது நாம் அரைத்த மாவை ஒரு கப்பில் மாற்றி அளவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த மாவை ஒரு அடிகனமான பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளலாம். ஒரு கப் உளுந்து மாவிற்கு 4 கப் வீதம் தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதன்படி தண்ணீர் மற்றும் உளுந்து மாவு இரண்டையும் ஒன்றாக கலந்து கொள்ளலாம். இப்பொழுது இந்த கடாயை அடுப்பில் வைத்து மிதமான தீயில் தொடர்ந்து கிளற வேண்டும்.

குறைந்தது 10 முதல் 15 நிமிடம் மிதமான தீயில் கைவிடாமல் கிளற வேண்டும். 15 நிமிடம் வேகவைக்கும் பொழுது உளுந்து நன்கு வெந்துவிடும். இந்த நேரத்தில் உளுந்து அளந்த அதே கப்பில் ஒன்று அல்லது ஒன்னே கால் கப் அளவு நாட்டு சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இதனுடன் வாசனைக்காக அரை தேக்கரண்டி ஏலக்காய் தூள் சேர்த்துக் கொள்ளலாம்.

முருங்கைக்கீரை பணியாரம், தல தல சிவப்பு நிறத்தின் காரச்சட்னி! ரெசிபி இதோ…

இப்பொழுது சுவையான உளுந்தம் பால் தயார். இதை அப்படியே சாப்பிட்டு விடலாம் கூடுதலாக சுவை தேவைப்பட்டால் நெய்யில் வறுத்த தேங்காய் மற்றும் வேர்க்கடலையை பொடி செய்து மேலே தூவி கலந்து சாப்பிட்டால் இன்னும் சுவை கூடுதலாக இருக்கும். குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் முதல் வயதான பெண்கள் வரை இதை தொடர்ந்து சாப்பிடலாம். ஊட்டச்சத்து நிறைந்த இந்த உளுந்து பால் சாப்பிடுவதன் மூலம் நல்ல எலும்புகள் வலுப்பெற்று உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும்.