குழந்தைகளுக்கு ஆறு மாதம் நிறைவடைந்து திட உணவுகளை கொடுக்க தொடங்கும் பொழுது ஏற்படும் மிகப்பெரிய குழப்பம் எந்த உணவை கொடுப்பது என்பதுதான். குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவானது அவர்களின் முழுமையான வளர்ச்சிக்கு உதவும் வகையில் இருக்க வேண்டும். எனவே ஒவ்வொரு தாய்மார்களும் குழந்தைகளுக்கான உணவை பார்த்து பார்த்து செய்து கொடுப்பார்கள். அப்படி உங்கள் குழந்தைக்கு எந்த உணவு கொடுக்கலாம் என்று குழப்பம் ஏற்பட்டால் இந்த உணவுகளை முயற்சி செய்து பாருங்கள். இந்த ரெசிபிக்கள் உங்கள் குழந்தையின் உடல் வளர்ச்சிக்கு உதவும். வாருங்கள் குழந்தைகளுக்கான இரண்டு சுவையான சத்தான ரெசிபிகளை பார்க்கலாம்.
வாழைப்பழ அவல்:
இந்த அவல் ரெசிபிக்கு கால் கப் அளவு அவலை எடுத்து நன்கு கழுவிக்கொள்ள வேண்டும். அவலை தண்ணீரில் நன்றாக அலசிய பிறகு இதில் புதிய தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். அவல் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி இதனை அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும் அவல் தண்ணீரில் நன்கு ஊறி மென்மையான பிறகு இந்த அவலை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்க்கவும். இந்த அவலுடன் ஒரு வாழைப்பழத்தை துண்டாக நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். பெரிய வாழைப்பழமாக இருந்தால் பாதி பழம் போதும். இப்பொழுது ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து இதனை நன்றாக அரைக்கவும். திப்பிகள் ஏதும் இல்லாதவாறு மைய அரைத்து எடுக்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான வாழைப்பழ அவள் தயாராகி விட்டது.
ஆப்பிள் + பேரிச்சை:
ஆப்பிள் பழம் குழந்தைகளுக்கு ஆறு மாதத்திற்கு பிறகு கொடுக்கத் தொடங்கலாம். ஆனால் இதனை பச்சையாக கொடுக்கக் கூடாது. அப்படி கொடுத்தால் அது குழந்தைகளுக்கு செரிக்காது. எனவே ஆப்பிள்களை துண்டுகளாக நறுக்கி ஒரு இட்டலி பாத்திரத்தில் தட்டில் வைக்கவும். அதனுடன் இரண்டு பேரிச்சை பழங்களையும் வைக்கவும். இப்பொழுது வழக்கமாக இட்லி வேக வைப்பது போல இந்த ஆப்பிள்களை வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். ஆப்பிள் நன்கு மென்மையாக வெந்த பிறகு அதன் தோலை நீக்கி மிக்ஸி ஜாரில் சேர்க்கவும். அதேபோல் பேரிச்சை பழத்தின் தோல் மற்றும் விதைகளை நீக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை இரண்டையும் நல்ல மிருதுவாக அரைத்து எடுத்துக் கொள்ளவும் அவ்வளவுதான் குழந்தைகளுக்கான மற்றொரு ரெசிபியும் தயார்.
இந்த இரண்டு ரெசிபிகளும் குழந்தைகளுக்கு நல்ல உடல் வளர்ச்சியை தருவதோடு சுவையிலும் நன்றாக இருப்பதால் நிச்சயம் உங்கள் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.