மூன்று தக்காளி போதும் வெளுத்து வாங்கும் மழைக்காலங்களில் அருமையான மற்றும் எளிமையான தக்காளி புளுசு ரெசிபி!

மழையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வீடுகளில் சமைப்பதற்கு போதுமான காய்கறிகள் சில நேரங்களில் இருப்பது இல்லை. வீட்டில் இருக்கும் காய்கறிகளை வைத்து சிறப்பாக சமைத்து அசத்த வேண்டும் என நினைப்பவர்களுக்கு இந்த ரெசிபி மிகவும் உதவியாக இருக்கும். வெறும் மூன்று தக்காளிப் பழம் போதும் அருமையான காரசாரமான புளிப்பான தக்காளி புளுசு தயார். எப்போதும் தக்காளி வைத்து ரசம் செய்பவர்களுக்கு இந்த புளுசு ரெசிபி சற்று வித்தியாசமாகவும் சுவை கூடுதலாகவும் இருக்கும். வாங்க தக்காளி புளுசு செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஒரு குக்கரில் மூன்று நன்கு பழுத்த தக்காளி பழம், தேவையான அளவு தண்ணீர், 1/2 தேக்கரண்டி மஞ்சள்தூள், அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து மிதமான தீயில் மூன்று விசில்கள் வரும் வரை வேக வைத்துக் கொள்ள வேண்டும்.

அந்த நேரத்தில் எலுமிச்சை பல அளவு புளியை கொதிக்கும் வெண்ணீரில் சேர்த்து ஊற வைத்துக் கொள்ளலாம். அடுத்ததாக ஒரு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளலாம். இரண்டு பச்சை மிளகாய் பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். ஐந்து பல் வெள்ளைப்பூண்டு பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானது ஒரு தேக்கரண்டி கடுகு, ஒரு தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, அரை தேக்கரண்டி சீரகம் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக நான் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை சேர்த்து வதக்கிக் கொள்ளலாம்.

வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கைப்பிடி அளவு கருவேப்பிலை, வெள்ளைப் பூண்டு சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். குக்கரில் தக்காளி பழம் நன்கு வந்ததும் அதை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளலாம்.

வெந்த தக்காளி பழங்களை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து வேகவைத்த தண்ணீர் கலந்து நன்கு மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது கடாயின் தக்காளி அரைத்த விழுதுகளை சேர்த்துக் கொள்ளலாம். இதனுடன் தக்காளி வேகவைத்த தண்ணீரும் சேர்த்துக் கொள்ளலாம்.

சிக்கன் சுக்கா மற்றும் மட்டன் சுக்கா உடன் போட்டி போடும் ரெசிபி! சிக்கன் வரமிளகாய் பிரட்டல் ட்ரை பண்ணலாம்!

தக்காளி சேர்த்த பிறகு கடாயில் அரை தேக்கரண்டி உப்பு, ஒரு தேக்கரண்டி தனி மிளகாய் தூள், அரை தேக்கரண்டி பெருங்காயத்தூள் பெருங்காயம் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். அடுத்ததாக ஊறவைத்த புளி கரைசல், ஒரு தேக்கரண்டி வெல்லம் சேர்த்து கலந்து மூடி போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

ஐந்து நிமிடம் நன்கு கொதித்த பிறகு கொத்தமல்லி தூவி இறக்கி விட வேண்டும். சூடான சாதம், இட்லி, தோசை என அனைத்திற்கும் இந்த தக்காளி கிரேவி மிகவும் பொருத்தமாக இருக்கும். மூன்று தக்காளி வைத்து எளிமையான முறையில் இந்த ரெசிபி தயார்.

Exit mobile version