சிக்கன் சுக்கா மற்றும் மட்டன் சுக்கா உடன் போட்டி போடும் ரெசிபி! சிக்கன் வரமிளகாய் பிரட்டல் ட்ரை பண்ணலாம்!

சிக்கன் வைத்து பல ரெசிபிகள் செய்தாலும் சுக்காவிற்கு தனி சுவையும் தனித்துவமும் இருக்கும். அதிகப்படியாக எண்ணெய் சேர்க்காமல் தரமான சுவையில் தயாராகும் இந்த சுக்காவிற்கு சூடான சாதம் முதல் சப்பாத்தி தோசை என அனைத்திற்கும் வைத்து சாப்பிடலாம். இந்த முறை சிக்கன் வாங்கும் பொழுது எப்பொழுதும் சுக்கா செய்யாமல் சற்று வித்தியாசமாக சிக்கன் வரமிளகாய் பிரட்டல் ஒரு முறை செய்து பார்க்கலாம். எளிமையான முறையில் தயாராகும் இந்த சிக்கன் ரெசிபி சுக்காவுடன் போட்டி போடும் அளவிற்கு சுவையில் அதிரடியாக இருக்கும். பத்து நிமிடத்தில் தயாராகும் சிக்கன் வரமிளகாய் பிரட்டல் ரெசிபி இதோ.

ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் அல்லது கடலெண்ணெய் சேர்த்து கைப்பிடி அளவு கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். அதில் நாம் கழுவி சுத்தம் செய்து வைத்திருக்கும் சிக்கனை சேர்த்து நன்கு எண்ணெயோடு வதக்க வேண்டும்.

ஒரு நிமிடம் வதக்கிய பிறகு மூடி போட்டு அப்படியே வேக வைத்து விடலாம். சிக்கனை மூடி போட்டு வேக வைக்கும் முன்பாக அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து ஒரு முறை கிளறி கொடுத்து வேகவைத்து விடலாம். சிக்கன் வெந்துகொண்டு இருக்கும் நேரத்தில் இதற்கு தேவையான மசாலாக்களை தயார் செய்து கொள்ளலாம்.

ஒரு மிக்ஸி ஜாரில் 10 முதல் 15 சின்ன வெங்காயம், காரத்திற்கு ஏற்ப காய்ந்த வத்தல் ஐந்து முதல் பத்து சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுக்க வேண்டும். இப்பொழுது அரைத்த விழுதுகளை கடாயில் இருக்கும் சிக்கனுடன் சேர்த்துக் கொள்ளலாம்.

மிக்ஸி ஜாரில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலந்து சிக்கனில் சேர்த்துக் கொள்ள வேண்டும். குறைவான அளவு தண்ணீர் மட்டுமே இதற்கு பயன்படுத்தினால் போதுமானது. இதனுடன் அரை தேக்கரண்டி உப்பு, அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து மீண்டும் கலந்து கொடுத்து மூடி போட்டு வேக வைக்க வேண்டும்.

முட்டை வைத்து பிரைட் ரைஸ் மட்டும் தானா… வாங்க முட்டை சட்டி சோறு செய்வதற்கான ரெசிபியை பார்க்கலாம்!

10 முதல் 15 நிமிடம் நன்கு மிதமான தீயில் வெந்து வரும் பொழுது தண்ணீர் நன்கு வற்றி கெட்டி பதத்திற்கு சிக்கன் வந்துவிடும். இறுதியாக கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான சிக்கன் வர மிளகாய் பிரட்டல் தயார். இதை சூடான சாதத்தில் அப்படியே வைத்து பிரட்டி சாப்பிடலாம்.

தயிர் சாதம், சாம்பார் சாதம் போன்ற வெரைட்டி சாதங்களுக்கும் இந்த சிக்கன் வரமிளகாய் பிரட்டல் அருமையான பொருத்தமாக இருக்கும்.

Exit mobile version