தோசை மாவு வைத்து இட்லி, தோசை, பணியாரம் என விதவிதமாக செய்யலாம்.. ஆனால் சட்னி செய்ய முடியுமா? ரெசிபி இதோ!

இட்லிக்கு அரைக்கும் மாவு வைத்து நாம் இட்லி, தோசை, பணியாரம், பண் தோசை, இட்லி மாவு போண்டா என விதவிதமான ரெசிபிகள் செய்திருக்கலாம். ஆனால் இந்த இட்லி தோசைக்கு சைடிஷ் ஆக கண்டிப்பாக சட்னி செய்ய வேண்டியது அவசியமாக இருக்கும். நான் இந்த முறை அதை இட்லி மாவு பயன்படுத்தி அருமையான காரச் சட்னி செய்வதற்கான ரெசிபி இந்த தொகுப்பில் பார்க்கலாம். இந்த காரச் சட்னி கையேந்தி பவன் காரச் சட்னியை போல சற்று தண்ணியாகவும் சுவையில் அருமையாகவும் இருக்கும். வாங்க சட்னி செய்வதற்கான ரெசிபியை பார்க்கலாம்.

ஒரு மிக்ஸி ஜாரில் அரை தேக்கரண்டி சீரகம், கைப்பிடி அளவு சின்ன வெங்காயம், நன்கு பழுத்த இரண்டு தக்காளி பழங்கள், 10 பல் வெள்ளை பூண்டு, ஐந்து காஷ்மீரி வத்தல், 2 காய்ந்த வத்தல், பெரிய நெல்லிக்காய் அளவு புளி, கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து நன்கு மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

கைப்பிடி அளவு சின்ன வெங்காயம் என்பது குறைந்தது 15 சின்ன வெங்காயங்களை பயன்படுத்திக் கொள்ளலாம். அரைக்கும் போது தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

அடுத்ததாக ஒரு அகலமான கடாயில் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் அரை தேக்கரண்டி கடுகு, கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக நாம் அரைத்து வைத்திருக்கும் தக்காளி விழுதுகளை கடாயில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இதனுடன் அரை டம்ளர் தண்ணீர், அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து கலந்து கொடுத்து கொதிக்க விட வேண்டும். அனைத்து விழுதுகளின் பச்சை வாசனை செல்லும் வரை ஒரு கொதி வைக்க வேண்டும். அதன் பிறகு மீண்டும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து கொடுத்து கொதிக்க விட வேண்டும்.

இந்த நேரத்தில் ஒரு அரை கரண்டி நன்கு புளித்த இட்லி மாவுடன் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து அந்த கரைசலை கடாயில் ஊற்றிக் கொள்ளலாம். மாவு சேர்த்த பிறகு நன்கு கலந்து கொடுத்து மீண்டும் ஒருமுறை கொதிக்க வைக்க வேண்டும்.

புசுபுசுன்னு உப்பலான பூரிக்கு உருளைக்கிழங்கு மசாலா… அதுவும் வெங்காயம்,தக்காளி என எதுவும் இல்லாமல் பாம்பே பூரி மசாலா!

இறுதியாக கைப்பிடி அளவு கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் சுவையான கையேந்தி பவன் காரச் சட்னி தயார். இந்த சட்னி சாப்பிடுவதற்கு நன்கு காரம் மற்றும் புளிப்புடன் தண்ணீராக சாப்பிட அருமையாக இருக்கும்.