இட்லி மற்றும் தோசைக்கு பலவிதமான சட்னி மற்றும் சாம்பார்கள் இருந்தாலும் சில நேரங்களில் நம் மனம் தேடுவது இட்லி பொடியை தான். இந்த இட்லி பொடி ஒரு முறை செய்தால் போதும் சில வாரங்களுக்கு அதே வாசம் மற்றும் சுவையுடன் அப்படியே இருக்கும். இந்த முறை அதேபோல் ஒரு மாதம் ஆனாலும் கெட்டுப்போகாத துவையல் ரெசிபி ஒன்றை பார்க்கப் போகிறோம். அதுவும் வெங்காயம் மற்றும் தக்காளி என எந்த பொருளும் சேர்க்காமல் நல்ல காரசாரமான துவையல் ரெசிபி இதோ..
முதலில் ஒரு அடி கனமான கடாயை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடு படுத்தி கொள்ளலாம். அடுத்து நான்கு தேக்கரண்டி உளுந்தம் பருப்பு, மூன்று தேக்கரண்டி கடலைப்பருப்பு, நான்கு தேக்கரண்டி தனியா சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
அடுத்ததாக 150 கிராம் அளவுள்ள பொடியாக நறுக்கிய இஞ்சி துண்டுகளை சேர்த்துக் கொள்ளலாம். அடுத்து காரத்திற்கு ஏற்ப 10 வர மிளகாய், எலுமிச்சை பழ அளவு புளி, 5 பல் வெள்ளை பூண்டு சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். இதனுடன் சுவையலுக்கு தேவையான அளவு கல் உப்பு சேர்த்து கலந்து கொள்ளலாம்.
இறுதியாக அரைத்து தேக்கரண்டி சீரகம் சேர்த்து நன்கு வதக்கி அடுப்பை அணைத்து விட வேண்டும்.
இப்போது நாம் வதக்கிய பொருட்களை சிறிது நேரம் ஆற வைத்துக் கொள்ளலாம். அதன் பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் ஒரு தேக்கரண்டி வெல்லம் சேர்த்து அரைத்துக் கொள்ளலாம்.
காய்கறிகள் இல்லாத சமயங்களில் கொத்தமல்லி வைத்து அருமையான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி இதோ…
அடுத்து ஒரு சிறிய கடாயில் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் ஒரு தேக்கரண்டி கடுகு, ஒரு தேக்கரண்டி பெருங்காயத்தூள், கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து நன்கு பொரிந்ததும் அரைத்து வைத்திருக்கும் துவையலை கடாயில் சேர்த்துக் கொள்ளலாம். எண்ணெயோடு சேர்த்து இரண்டு நிமிடம் நன்கு துவையலை பிரட்டி கொடுக்க வேண்டும்.
இப்பொழுது சுவையான ஒரு மாதம் ஆனாலும் கெட்டுப் போகாத துவையல் தயார். இதை சூடான சாதம், இட்லி, தோசை என அனைத்திற்கும் வைத்து சாப்பிடலாம். அவசரமாக கிளம்பும் நேரங்களில் இது போன்ற துவையல் இல்லத்தரசிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.