மீதமான சாதம் வைத்து தோசை மற்றும் தேங்காய் பொடி! ரெசிபி இதோ….

மதிய வேலைகளில் நாம் செய்த சாதம் மிதமாகிவிட்டால் இரவு நேரங்களில் சாப்பிட முடியாத பொழுது இதுபோல தோசை செய்து சாப்பிடலாம். எளிமையான முறையில் நொடியில் தயாராகும் இந்த தோசைக்கு தேங்காய் வைத்து அருமையான பொடி செய்வதற்கான ரெசிபியும் இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க.

முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு கப் மீதமான சாதம், முக்கால் கப் வெள்ளை ரவை, முக்கால் கப் தயிர் சேர்த்து மையாக அரைக்க வேண்டும். அரைக்கும் பொழுது தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளலாம். அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ள வேண்டும்.

இதனுடன் அரை தேக்கரண்டி உப்பு மற்றும் அரை தேக்கரண்டி பேக்கிங் சோடா சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இப்பொழுது இந்த மாவை 15 நிமிடம் அப்படியே ஓரமாக வைத்து விடலாம்.

அடுத்ததாக இந்த தோசைக்கு சைடிஷ் ஆக தேங்காய் வைத்து அருமையான பொடி செய்யலாம் வாங்க. இதற்காக ஒரு அகலமான கடாயில் ஒரு தேக்கரண்டி கடலைப்பருப்பு, ஒரு தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, அரை தேக்கரண்டி சீரகம், அரை தேக்கரண்டி மிளகு, காரத்திற்கு ஏற்ப காய்ந்த வத்தல் நான்கு முதல் ஏழு, ஒரு தேக்கரண்டி வெள்ளை எள், ஒரு தேக்கரண்டி அரிசி சேர்த்து நல்ல வாசனை வரும் வரை வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

அடுத்ததாக அதே கடாயில் ஒரு கப் துருவிய தேங்காய், நான்கு வெள்ளைப் பூண்டு சேர்த்து வதக்க வேண்டும். தேங்காய் துருவல் பொன்னிறமாக மாறும் வரை வதக்கி எடுத்துக் கொள்ளலாம். தேங்காயில் ஈரப்பதம் முழுவதுமாக வற்றி நல்ல பொன்னிறத்திற்கு வர வேண்டும்.

குஜராத் ஸ்பெஷல் லாப்ஸி! ஹெல்தியான மற்றும் திட்டிப்பான இனிப்பு ரெசிபி இதோ!

இப்பொழுது நாம் வறுத்த இரண்டு பொருட்களையும் ஒன்றாக ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு மையாக பொடி செய்து கொள்ள வேண்டும். அரைக்கும் பொழுது பொடிக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளலாம்.

தோசை மாவு 15 நிமிடம் புளிக்க வைத்த பிறகு தோசை கல்லில் அடுப்பில் வைத்து சூடானதும் இந்த மாவை மெல்லிதாக சேர்த்து தோசை வட்ட வடிவில் திரட்டி கொள்ள வேண்டும். இதன் மேல் தாராளமாக நெய்சேர்த்து இப்பொழுது நாம் வறுத்து அரைத்து வைத்திருக்கும் பொடியையும் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வேகவைத்து எடுத்தால் அருமையான தோசை தயார்.