தலைவலி, மூட்டு வலி , வயிற்றுப்புண் என பல பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும் ஒரே மூலிகை தொக்கு! அருமையான ரெசிபி இதோ…

உடம்பில் பல வியாதிகள் இருந்தாலும் அதற்கான பல மருத்துவர்கள் ஒரே நேரத்தில் சென்று பார்க்க முடியாது. அதற்கு பதிலாக நம் உணவில் சிறு சிறு மாற்றங்களை செய்து அருமையான பலனை அடைய முடியும். உணவே மருந்தாக மாறும்பொழுது நம் உடலில் எந்த நோய் தொந்தரவும் இல்லாமல் நோயற்ற வாழ்வை வாழ முடியும். அந்த வகையில் தலைவலி, மூட்டு வலி, உடல் அசதி, வயிற்றுப்புண் போன்ற பல பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வாக அமையும் மூலிகை தொக்கு ரெசிபி. . இந்த மூலிகை தொக்கு ரெசிபி செய்வதற்கான எளிமையான விளக்கம் இதோ…

இந்த மூலிகை தொக்கு செய்வதற்கு முதலில் கைப்பிடி அளவு முடக்கத்தான் கீரை, முசுமுசுக்கை கீரை, மணத்தக்காளி கீரை, தூதுவாளை இலை, மற்றொரு கைப்பிடி அளவு கருவேப்பிலை, கொத்தமல்லி இலை, புதினா இலைகளை எடுத்து கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.


அடுத்ததாக அகலமான கடாயில் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் பூண்டு சேர்த்துக் கொள்ள வேண்டும். வெள்ளை பூண்டு பொன்னிறமாக மாறத் துவங்கியதும் காரத்திற்கு ஏற்ப நான்கு முதல் 5 பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.

அடுத்ததாக ஒரு தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, ஒரு தேக்கரண்டி கடலைப்பருப்பு, ஒரு தேக்கரண்டி சீரகம், அரை தேக்கரண்டி மிளகு, காய்ந்த வத்தல் மூன்று சேர்த்து பருப்பு பொன்னிறமாக மாறும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து நாம் சேகரித்து வைத்திருக்கும் மூலிகை இலைகளை கடாயில் சேர்த்து வதக்க வேண்டும். சில இலைகள் அதிகமாக கசப்பு தன்மை உடையதால் நல்ல எண்ணெயுடன் சேர்த்து வதக்க வேண்டும். குறைந்தது ஐந்து முதல் பத்து நிமிடம் வரை மிதமான தீயில் இலைகளை வதக்கிக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது வதக்கிய மூலிகை இலை மற்றும் மசாலாக்களை ஒரு மிக்ஸி ஜாரில் மாற்றிக் கொள்ளலாம். இதனுடன் ஒரு கைப்பிடி அளவு தேங்காய் துருவல், சிறிய எலுமிச்சை பழ அளவு புளி, அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு மையாக அரைக்க வேண்டும். தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளலாம்.

இப்பொழுது அதே கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் அரை தேக்கரண்டி கடுகு, கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும். அடுத்து நாம் அரைத்து வைத்திருக்கும் விழுதுகளை கடாயில் சேர்த்துக் கொள்ளலாம்.

மிதமான தீயில் இந்த கலவையை மீண்டும் கொதிக்க விட வேண்டும். ஐந்து நிமிடம் கொதிக்கும் பொழுது கடாயின் ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் இப்பொழுது மூலிகை தொக்கு தயாராக மாறியுள்ளது. இந்த மூலிகை தொக்கு அப்படியே இட்லி, தோசை, ஆப்பம் இவற்றிற்கு வைத்து சாப்பிடலாம்.

15 நிமிடத்தில் லஞ்ச் பாக்ஸ் தயார்…. டேஸ்டான மற்றும் ஹெல்தியான சோயா பிரியாணி!

மேலும் இதில் ஒரு சிறப்பாக இந்த தொக்கு வைத்து அருமையான சாதம் ஒன்று செய்து விடலாம். ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து அரை தேக்கரண்டி கடலைப்பருப்பு, அரை தேக்கரண்டி உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

இதனுடன் இரண்டு காய்ந்த வத்தல், கைப்பிடி அளவு கருவேப்பிலை, கைப்பிடி அளவு வேர்க்கடலை சேர்த்து வறுக்க வேண்டும். இப்பொழுது தொக்கு இரண்டு தேக்கரண்டி சேர்த்து எண்ணெயுடன் நன்கு கிளறி சூடான சாதத்தை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் உப்பு சேர்த்துக் கொள்ளலாம். இப்பொழுது சுவையான மூலிகை தொக்கு சாதம் தயார்.