இந்த ஒரு தொக்கு போதும்! இட்லி, தோசை,சப்பாத்தி,சாதம் என எதற்கும் பஞ்சமே இல்லாமல் அல்டிமேட் ஆக அசத்தும் ரெசிபி இதோ!

சாதம், குழம்பு என விதவிதமாக சமைக்க நேரம் இல்லாத பொழுது பெரும்பாலான சமயங்களில் நமக்கு கை கொடுப்பது தொக்கு வகைகள் தான். அதிலும் ஒரு சில தொக்கு வகைகள் சாதத்துடன் மட்டுமல்லாமல் இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி , பழைய சாதம் என அனைத்திற்கும் கச்சிதமாக பொருந்தி அருமையான சுவையை கொடுக்கும். அப்படி ஒரு தொக்கு ரெசிபியை தான் இந்த தொகுப்பில் பார்க்கப் போகிறோம். அனைவருக்கும் பிடித்த கத்திரிக்காய் மற்றும் உருளைக்கிழங்கு வைத்து அருமையான தொக்கு ரெசிபி செய்வதற்கான விளக்கம் இதோ…

ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் அரை தேக்கரண்டி கடுகு, அரை தேக்கரண்டி வெந்தயம், ஒரு தேக்கரண்டி கடலைப்பருப்பு, ஒரு தேக்கரண்டி வேர்க்கடலை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

பருப்பு வகைகள் பொன்னிறமாக மாறியதும் பொடியாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் நன்கு பழுத்த இரண்டு அல்லது மூன்று தக்காளிப்பழம் சேர்த்து வதக்கிக் கொள்ளலாம்.

தக்காளி நன்கு எண்ணெயோடு சேர்ந்து வதங்கி மசிந்து வரும் நேரத்தில் மசாலா பொருட்களை சேர்த்துக் கொள்ளலாம். இதற்காக அரை தேக்கரண்டி மஞ்சள்தூள், ஒரு தேக்கரண்டி தனி மிளகாய் தூள், இரண்டு தேக்கரண்டி தனியாத்தூள், அரை தேக்கரண்டி கல் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

மசாலாக்களுடன் இணைந்து வெங்காயம் மற்றும் தக்காளி நன்கு வதங்கி தொக்கு பதத்தில் வரும். அந்த நேரத்தில் பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கு ஒன்று அல்லது இரண்டு சேர்த்துக் கொள்ளலாம்.
உருளைக்கிழங்கு மசாலாவுடன் இணைந்து நன்கு வதங்க வேண்டும். இப்பொழுது உருளைக்கிழங்கு நன்கு வெந்து வருவதற்கு ஏற்ப அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து மசாலாக்களுடன் கலந்து கொள்ளலாம்.

மிதமான தீயில் குறைந்தது ஐந்து நிமிடம் உருளைக்கிழங்கை வேக வைக்க வேண்டும். ஐந்து நிமிடம் கழித்து உருளைக்கிழங்கு முக்கால் பாகம் வெந்ததும் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் ஐந்து பிஞ்சு கத்திரிக்காய் சேர்த்துக் கொள்ளலாம்.

கத்திரிக்காயை மசாலாக்களுடன் சேர்த்து நன்கு ஒரு சேர கலந்து மிதமான தீயில் மீண்டும் ஒருமுறை ஐந்து நிமிடம் வேக வைக்க வேண்டும். கத்திரிக்காய் சேர்க்கும் பொழுது தண்ணீர் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை.

மசாலாக்களில் இருக்கும் தண்ணீரை வைத்து எண்ணெயோடு கத்திரிக்காய் நன்கு வதங்கி தயாராகிவிடும். ஐந்து நிமிடம் கழித்து பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி கிளறிக்கொடுத்து இறக்கினால் உருளைக்கிழங்கு கத்திரிக்காய் தொக்கு தயார்.

பித்தத்தை குறைத்து, உடல் எடையை கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவும் ஒன் பாட் ரைஸ் இதோ!

இந்த தொக்கு இரண்டு கப் வடித்த சாதத்தை சேர்த்து கிளறினால் சுவையான தொக்கு சாதம் இப்பொழுது தயார். அது மட்டும் இல்லாமல் இந்த கத்திரிக்காய் உருளைக்கிழங்கு தொக்கு வைத்து தோசை, இட்லி, சப்பாத்தி, பழைய சாதம் என அனைத்திற்கும் சைடிஷ் ஆக வைத்து சாப்பிடலாம்.

மேலும் இந்த உருளைக்கிழங்கு கத்திரிக்காய் தொக்கு சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதம் போன்ற கிலறு சாதங்களுக்கும் ஏற்ற சைடிஷ் ஆக இருக்கும்.