மார்கழி மாதம் தெய்வ வழிபாடு நிறைந்த மாதம் ஆகும். திருப்பள்ளி எழுச்சி, ஆருத்ரா தரிசனம் என பலவித ஆன்மீக நிகழ்வுகள் நிறைந்த மாதம் ஆகும். இந்த மார்கழி மாதத்தின் திருவாதிரை நட்சத்திரம் சிவபெருமானுக்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் தான் சிதம்பரத்தில் ஆருத்ரா தரிசனம் நடைபெறும். இந்த திருவாதிரை நாள் அன்று வீடுகளில் பெண்கள் திருவாதிரை களி, ஏழு காய் கூட்டு செய்து இறைவனை வழிபாடு செய்வார்கள். இந்த ஏழு காய் கூட்டு என்பது வழக்கமான சாம்பார் போன்று இல்லாமல் வித்தியாசமாக பலவித காய்கறிகள் சேர்த்து செய்யக்கூடிய கூட்டு ஆகும். வாருங்கள் திருவாதிரை ஸ்பெஷலான எந்த ஏழு காய் கூட்டு எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
மார்கழி மாத ஸ்பெஷல் அசத்தலான அக்காரவடிசல் இப்படி செய்து பாருங்கள்…!
இந்த ஏழு காய் கூட்டு செய்வதற்கு ஏழு வகையான நாட்டு காய்கறிகளை எடுத்துக் கொள்ளலாம். ஒற்றைப்படையில் காய்கறிகளை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். பரங்கிக்காய், சக்கரை வள்ளி கிழங்கு, முருங்கைக்காய், அவரைக்காய், வாழைக்காய், மொச்சை, கத்தரிக்காய், மாங்காய், வெள்ளை பூசணி போன்ற காய்கறிகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். காய்கறிகளை மிகச் சிறிய துண்டாக நறுக்கி விடாமல் ஓரளவு பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். பிறகு ஒரு பாத்திரத்தில் நறுக்கி வைத்திருக்கும் காய்கறிகளை சேர்த்து காய்கறிகள் வேக தேவையான அளவு தண்ணீர் விடவும். இதில் சிறிதளவு உப்பு, கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், சிறிதளவு பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து மூடி போட்டு காய்கறிகளை வேக விட வேண்டும்.
முக்கால் கப் அளவு துவரம் பருப்புடன் மஞ்சள்தூள் ஒரு குக்கரில் சேர்த்து அதையும் வேகவைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பருப்பு நன்கு வெந்து குழைந்து இருக்க வேண்டும். பிறகு ஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் அளவிற்கு எண்ணெய் சேர்த்து இதில் இரண்டரை டீஸ்பூன் முழு மல்லி விதை, ஒரு டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்பு, ஆறு மிளகு ஆகியவற்றை சேர்த்து மிதமான தீயில் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இவை ஓரளவு வறுபட்டதும் கால் டீஸ்பூன் சீரகம், கால் டீஸ்பூன் வெந்தயம், ஐந்து காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். பிறகு இரண்டு மேசை கரண்டி அளவு துருவிய தேங்காய் மற்றும் சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து அதையும் நன்றாக வறுத்துக் கொள்ளவும்.
மார்கழி மாத திருவாதிரை ஸ்பெஷல் சுவையான திருவாதிரை களி செய்வது எப்படி…!
வறுத்து வைத்திருக்கும் மசாலாக்களை சிறிது நேரம் ஆற விடவும். மசாலா பொருட்கள் நன்கு ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் விட்டு மைய அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது காய்கறிகள் நன்கு வெந்ததும் அதில் சிறிய நெல்லிக்காய் அளவு புளி கரைசலை ஊற்றி கொதிக்க விடவும். பிறகு நாம் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்த்து சிறிது நேரம் கலந்து விட வேண்டும். வேக வைத்த துவரம் பருப்பையும் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். குழம்பு நன்கு கொதித்ததும் இதற்கான தாளிப்பை சேர்க்கலாம் ஒரு சிறிய கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் மற்றும் கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நாம் செய்த கூட்டோடு கலந்து விடவும். அவ்வளவுதான் அட்டகாசமான ஏழு காய் கூட்டு தயார்.