மார்கழி மாதத்தில் திருவாதிரை நாள் அன்று சிதம்பரம் ஸ்ரீ நடராஜ பெருமாளுக்கு நெய்வேத்தியமாக களி செய்து படைப்பது வழக்கம். கோவிலில் மட்டும் அல்ல வீடுகளிலும் பலர் சிவபெருமானுக்கு திருவாதிரை களி செய்து நெய்வேத்தியமாக படைத்து வழிபாடு நடத்துவார்கள். இந்த திருவாதிரை களி அரிசி பருப்பு, நெய், வெல்லம் ஆகியவை சேர்த்து செய்யப்படும் சுவை நிறைந்த களி ஆகும். வாருங்கள் சிதம்பரம் ஸ்ரீ நடராஜ பெருமாளுக்கு பிடித்தமான இந்த திருவாதிரைக் களியை எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
செட்டிநாட்டு ஸ்பெஷலான இனிப்பு வகை உக்கரா செய்வது எப்படி?
திருவாதிரை களி செய்வதற்கு முதல் நாள் இரவே ஒரு கப் அளவு பச்சரிசியை நன்றாக கழுவி அதனை காய வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு முதல் நாள் கழுவி காயவைத்த பச்சரிசியை ஒரு கடாயில் சேர்த்து வறுக்க வேண்டும். அரசி சிவந்து வரும் வரை ஐந்து நிமிடங்கள் நன்றாக வறுத்து கொள்ளவும். அரிசி வறுப்பட்டதும் இதனை தனியாக ஒரு தட்டில் மாற்றி ஆற விட வேண்டும். பிறகு அதே கடாயில் இரண்டு மேசை கரண்டி அளவிற்கு பாசிப்பருப்பை சேர்த்து அதையும் நன்றாக வறுத்து கொள்ளவும். பிறகு பாசிப்பருப்பு சிவந்து வறுபட்டதும் அரிசியுடன் சேர்த்து ஆறவிட வேண்டும்.
இப்பொழுது ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் அளவிற்கு வெல்லம் சேர்த்துக் கொள்ளவும். வெல்லத்தை நன்கு பொடித்து சேர்க்கவும். இதனுடன் ஒரு கப் அளவிற்கு தண்ணீர் சேர்க்க வேண்டும். வெல்லத்தை பாகு போல காய்ச்ச வேண்டிய அவசியம் இல்லை. வெல்லம் தண்ணீரில் நன்கு கரைந்து வந்தால் போதும். பிறகு நாம் ஏற்கனவே வறுத்து வைத்திருக்கும் அரிசி மற்றும் பருப்பை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். அதிகமான வேகத்தில் இல்லாமல் குறைவான வேகத்தில் ரவை பதத்திற்கு இதனை அரைத்து எடுக்கவும்.
மார்கழி மாத ஸ்பெஷல் அசத்தலான அக்காரவடிசல் இப்படி செய்து பாருங்கள்…!
நல்ல அடி கனமான பாத்திரத்தில் ஐந்து கப் அளவிற்கு தண்ணீர் சேர்க்கவும். இதனுடன் நாம் கரைத்து வைத்திருக்கும் வெல்ல தண்ணீரை வடிகட்டி சேர்த்துக் கொள்ள வேண்டும். சிறிதளவு துருவிய தேங்காயை இதனுடன் சேர்த்து கால் ஸ்பூனிற்கும் குறைவாக உப்பு சேர்த்து இதனை நன்றாக கலந்து விட வேண்டும். இந்த தண்ணீர் நன்கு கொதித்து வந்ததும் நாம் ஏற்கனவே அரைத்து வைத்திருக்கும் அரிசி மற்றும் பருப்பை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறி விடவும். அரிசி நன்கு வெந்து வரும் வரை இதனை கிளறி விட வேண்டும்.
அரிசி ஓரளவு வெந்து வந்ததும் இதனை குக்கருக்கு மாற்றிவிடலாம். ஒரு குக்கரில் அடிப்பகுதியில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அதன் மேல் ஸ்டாண்ட் வைத்து வேறொரு பாத்திரத்தில் நாம் செய்து வைத்திருக்கும் களியை சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு இதனை மூடி போட்டு இரண்டு விசில் வரும் வரை வைக்க வேண்டும். குக்கர் விசில் வந்து அடங்கியதும் இதனை எடுத்து விடலாம். பிறகு ஒரு பேனில் மூன்று மேசை கரண்டி நெய் சேர்த்துக் கொள்ளவும். இதில் விருப்பமான அளவு முந்திரியை சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும். இதில் நாம் குக்கரில் வேகவைத்து எடுத்த களியை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். இதனுடன் மூன்று ஏலக்காயை தட்டி சேர்த்து நன்கு கிளறி விடவும். களி ஒட்டாமல் சுருண்டு வந்ததும் இதனை இறக்கி விடலாம்.