சுலபமா செய்யலாம் சுவையான திருநெல்வேலி ஸ்பெஷல் சொதி குழம்பு…!

திருநெல்வேலி பகுதியில் உள்ள பிரபலமான ஒரு உணவு வகை சொதி குழம்பு. தேங்காய் பால் மற்றும் காய்கறிகள் சேர்த்து செய்யும் இந்த குழம்பு வகையானது அனைத்து வகையான டிபன் வகைகளுக்கும் ஏற்றது. சாதம், இட்லி, தோசை, இடியாப்பம், ஆப்பம் என அனைத்து உணவுகளுக்கும் ஏற்றது இந்த சொதி குழம்பு. திருநெல்வேலி பகுதியில் திருமணம் ஆகி வீட்டிற்கு வரும் மருமகன்களுக்கு வைக்கும் விருந்தில் இந்தக் குழம்பு கட்டாயம் இடம் பெற்று விடும். இப்படி பாரம்பரியம் நிறைந்த இந்த சொதி குழம்பு எப்படி சுலபமாக செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

அனைத்து வகையான டிபன் மற்றும் சாதத்திற்கு ஏற்ற காரசாரமான இஞ்சி துவையல்…

சொதி குழம்பு செய்வதற்கு முதலில் தேவையான காய்கறிகளை தயார் செய்து வைத்துக் கொள்ளலாம். அதற்கு ஒரு கேரட், 12 பீன்ஸ், ஒரு முருங்கைக்காய், இரண்டு உருளைக்கிழங்கு ஆகியவற்றை மிகவும் பொடியாக இல்லாமல் ஒரு இன்ச் நீளத்துக்கு நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். இவற்றோடு அரை கப் அளவு பச்சை பட்டாணியையும் எடுத்துக் கொள்ளவும். கால் கப் அளவு பாசிப்பருப்பை சிறிதளவு தண்ணீர் விட்டு குக்கரில் மூன்று விசில் வைத்து வேகவிடவும். தேங்காயை துருவி இரண்டு கப் அளவிற்கு பால் வரும்படி தேங்காய்ப்பால் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு துண்டு இஞ்சி பொடியாக நறுக்கி மிக்ஸி ஜாரில் சேர்த்து அதில் சிறிதளவு தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். இஞ்சியை அரைத்த பிறகு ஒரு வடிகட்டியில் வடிகட்டி இஞ்சி சாறை மட்டும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இப்பொழுது ஒரு பாத்திரத்தில் நறுக்கி வைத்திருக்கும் காய்கறிகளை சேர்த்துக் கொள்ளவும். காய்கறிகள் வேக தேவையான அளவிற்கு தண்ணீர் விட்டு பாத்திரத்தை மூடி காய்கறிகளை வேக விட வேண்டும். காய்கறிகள் ஓரளவு வெந்ததும் அடுப்பை நிறுத்தி விடலாம். இப்பொழுது ஒரு கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் சேர்க்கவும் எண்ணெய் காய்ந்ததும் அரை ஸ்பூன் கடுகு, ஒரு துண்டு பட்டை, ஒரு பிரியாணி இலை, இரண்டு கிராம்பு, இரண்டு ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் ஆறு சின்ன வெங்காயத்தை தோல் உரித்து அதையும் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.

இரண்டு பூண்டு பற்கள் மற்றும் 3 பச்சை மிளகாய் ஆகியவற்றையும் சேர்த்து நன்கு வதக்கவும். இவற்றை வதக்கும் பொழுதே சிறிதளவு கறிவேப்பிலையையும், கால் டீஸ்பூன் அளவிற்கு மஞ்சள் தூளையும் சேர்த்துக் கொள்ளலாம். இவை வதங்கியதும் நாம் ஏற்கனவே வேக வைத்திருக்கும் காய்கறிகள் மற்றும் வேக வைத்த பாசிப்பருப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து விடவும். இதற்கு தேவையான அளவு உப்பையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனை மூடி போட்டு ஒரு ஏழு நிமிடங்கள் வரை வேக விட வேண்டும்.

ஏழு நிமிடங்களுக்குப் பிறகு இதில் நாம் எடுத்து வைத்திருக்கும் தேங்காய் பாலை சேர்த்து கொதிக்க விடவும். இது நீண்ட நேரம் கொதிக்க வேண்டிய அவசியம் இல்லை. குழம்பு கெட்டியாக இருந்தால் போதும் என நினைத்தால் முதல் தேங்காய் பாலை மட்டும் சேர்த்தால் போதுமானது. இல்லையென்றால் இரண்டாம் தேங்காய் பாலையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இறுதியாக ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு இஞ்சி சாறு மற்றும் அரை மூடி எலுமிச்சை பழத்தின் சாறு சேர்த்து கொத்தமல்லி தழை தூவி இறக்கி விடலாம்.

அவ்வளவுதான் சுவை நிறைந்த திருநெல்வேலி ஸ்பெஷலான சொதி குழம்பு தயார்…!